27/09/2018

அம்மா ஜெகதாம்பாள் !


கோவிலில் நீண்ட காலம் பூசை செய்யும் ஐயரை நிறுத்தினால், ஐயர் என்ன செய்யலாம்? புதிய கோவில் தொடங்கலாம் என்பதெல்லாம் சமகாலத் தேர்வுநிலை. ஆனால் முன்னைய காலம் அவ்வாறில்லை. பூஜையும் புரோகிதமும் மட்டுமே தெரிந்திருந்த அந்தணர்களுக்கு வேறு கோவில் தேடிச் செல்வதைத் தவிர வாழ்விற்கு மாற்று  வழியில்லை.  அக் குடும்பங்களின் வலி மிகவும் துயரமானது. அந்தத் துயரத்தை " ஆகுதி " எனும் சிறுகதையில் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் அ.சோமகாந்தன் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.  வாழ்வின் துயருக்குள் தன் குடும்பம் சிக்கி விடக்கூடாதே என்பதற்காக, சிரமங்களையெல்லாம் தாங்கிய வண்ணம், கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள் எனும் உண்மையை, " பொற்சிறையில் வாடும் புனிதர்கள் " நாவலில் பதிவு செய்திருக்கின்றார் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் தெனியான். இத்துயர்களை அறிந்த போது என்னுள் எழுந்த  துணிபே " செய்யும் தொழிலே தெய்வம்" எனச் சொல்லி, தெரிந்த வேலை எதையும் செய்யலாமெனும் எண்ணம். அதனாலே பலவற்றையும் ஆர்வமாக கற்கவும் அறியவும் முயன்றேன். அவையெல்லாவற்றுக்குமான அடிப்படை; வாசிப்பு என்பேன். அதை எனக்குச் சிறு வயதிலே அறிமுகப்படுத்தியவள் என் அம்மா ஜெகதாம்பாள் !
அம்மா!
எல்லோர்க்கும் பிடித்தமான, நேசிப்புக்குரிய, ஒரு உறவுமுறை அம்மா. நாம் விரும்பித் தேர்வு செய்யமுடியாத உறவும் கூட. இவ்வுலகினை, உலகின் சிறப்புக்களை, வாழ்வின் பெருமிதங்களை, நாம் காண, களிப்புற வழிசமைத்தவள். பெருமைக்குரிய தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்ததினால், எனக்கும் அந்தப்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்தத் தாயுடன் வாழ்ந்த காலத்தின் நீட்சிதான் சொற்பமானது.

என் பத்தாவது வயதில் காலமாகிய  தாயுடனான வாழ்க்கைக் காலத்தில், முதல் ஐந்து வருடங்கள் பால்யப் பருவத்தில் கழிந்துவிட, இறுதி வருடமும் அவளது நோயின் காரணமாகக் குழப்பமாய் அமைந்து விட, நான்கு வருட காலப்பகுதியே அவளைக் கற்கவும், அவளிடமிருந்து கற்கவும் முடிந்தது. ஆனாலும், அவளிடமிருந்து கற்றுக்கொண்ட பலவும் , அவள் பிரிந்து, பல ஆண்டுகள் ஆனபோதும், இன்றுவரை என்னுடன் வாழ்கின்றது, என்னை வாழ்விக்கின்றது. அதில் முக்கியமானது வாசிப்பு.  எவ்வளவு வேலைப்பளுக்கள் இருந்தாலும் தினமும் ஏதோ ஒரு சிறு பகுதியையாவது வாசித்துவிடுகின்றேன்.

அம்மாவைப்பற்றிய அடையாளங்கள் சின்ன வயதில் என்னுள் பதிந்தபோது, சாதாரணமான சம்பவங்களாகத்தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் இப்போது பார்க்கையில்தான் தெரிகிறது அவளின் மாசிலா மாற்றுக்களின் மகத்துவம். அவளின் மறைவின் போது, நாம் அழுததிலும் பார்க்க, தம்பலகாமம் அழுதது என்று சொல்லலாம். அந்தளவுக்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தாள். அதற்குக் காரணம், அவளின் மகத்தான மனித நேசிப்பு. நல்லவன், கெட்டவன், குடிகாறன், கோள் சொல்பவன், சின்னவன், பெரியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என எந்தப் பாகுபாடுமில்லமால், பேதங்கள் கொள்ளாமல், அனைவரையும் சமமாக மதிக்கத் தெரிந்த மாதரசி.

அன்பு அன்பு அன்பு, அவளுடைய தாரக மந்திரமே அதுதான். அதன் நித்திய ஜெபிப்பால் அவள் பெற்றிருந்த பலம் மிகப்பெரியது. குறுமுனி போன்று உயரத்தில் குறைவான அந்தக் குட்டைப்பெண்மணியின் கேள்விகளுக்குப் பயமும் மரியாதையுமாகப் பதில் சொல்லும் மனிதர்கள் பலர், கடைத்தெருவீதியில் வாய்சொல்வீரர்களாக நிற்பதைப் பாடசாலை செல்லும் வேளைகளில் கண்டு அதிசயித்திருக்கின்றேன். குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பும் குடிமன்னர்கள், எங்கள் வீட்டு வாசலில் அம்மா நிற்பதைக் கண்டதும், மரியாதை மன்னர்களாகச் செல்லும் பவ்வியம் கண்டிருக்கின்றேன். அப்போது யோசித்ததுண்டு, ஏன் இப்படி எல்லோரும் அம்மாவிடம் பயந்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்கள் பார்த்துப் பயங்கொள்ளும் முற்கோபியான என் அப்பா கூட, அம்மாவின் வார்த்ததைகளில் அமைதியாகிவிடுவார். இப்போது புரிகிறது, அது அவள் மேலான பயமில்லை, பணிவு என்று. மற்றவர்களைப் பணிய வைக்க அவள் பாவித்த ஒரே ஆயுதம், எல்லோரையும் மிகுதியாக நேசித்ததுதான். நேசிப்பின் வழி நின்ற அவள், அதே நேசிப்பின் வழியாக எட்டிய பரிமானங்கள் மிக மிக உயரமானவை.

ஊருக்குள் ஒரு துயரம் என்றாலோ, மகிழ்ச்சி என்றாலோ, அம்மாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். யார் யாருக்கு என்ன உதவிகள்தேவை, யார் யாரிடமிருந்து அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதெல்லாம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளால் மட்டுமே முடியும்.

சாதியக்கட்டுமானங்களின் வழிவந்தவளாயினும், சாதியத்தின் வழியில் எவரையும் பார்த்தறியாதவள். அந்த ஜீவநேசிப்பே அவளை அனைவர்பாலும் கவர்ந்திற்று. அதற்காக அவள் பகுத்தறிவுவாதியல்ல. நிறைந்த கடவுள் பக்தியுடையவள்தான். முப்பத்தைந்து வருடங்களின் முன்னமே, பெண்களை அணியாகவும், அமைப்பாகவும், திரட்டி ஆக்கவழியில் வழிநடாத்தினாள். ஆனால் அரசியல்வாதியல்ல. இசையில் வயலினும், இலக்கியத்தில் புத்தகங்களும், வாசிக்கத் தெரிந்தவள். நன்றாகப் பாடவும் செய்வாள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகனாய் மதிக்கப்படும் சேகுவேராவின் தாய் ஸெலியாவுக்கும், என் தாய்க்கும் ஒற்றுமைகள் இருந்தததை, பின்னாட்களில் சேயின் வரலாற்றை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். ஸெலியா போன்று வசதிமிக்க நடுத்தரக்குடும்பத்தின் வாரிசு, பரோபகாரி, பெண்களின் துன்பங்களுக்கான மாற்றுச்சிந்தனைகள், ஆஸ்த்மா நோய்யுள்ள மூத்த மகன், எனச்சில ஒற்றுமைகள் தெரிந்தன. ஆனால் அம்மா சேகுவேராவைப் பற்றியோ, ஸெலியாவைப் பற்றியோ, அறிந்திருந்தாளா என்பது தெரியவில்லை.

சிறு வயதில் ஆஸ்த்மா நோயால் மிகவும் துன்பப்பட்ட என்னை, நோயின் கடுமையிலிருந்து ஆற்றுப்படுத்துவதற்காக சேயின் தாய் ஸெலியா போன்றே, என் தாயும், எனக்குக்கற்றுத்தந்தவைகள் ஏராளம். என் ஏழாவது வயதிலேயே வாசிப்பை யாசிக்கக் கற்றுத்தந்தாள். எட்டாவது வயதில் எழுதும் வகை சொல்லித்தந்தாள். ஒன்பதாவது வயதில் வானொலி கேட்கப்பழக்கினாள். அந்தப்பழக்கத்தில் அறிமுகமான நிகழ்ச்சிதான் வானொலி மாமா நடாத்திய '' சிறுவர் மலர் '' நிகழ்ச்சி. சனியோ, ஞாயிறோ மதியம் பன்னிரெண்டு மணிக்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. அப்போது வானொலி மாமாவாக இருந்தவர், நா.மகேசன். மிக அருமையான குழந்தைகளுக்கான கலைஞர்.

அம்மாவின் வழிகாட்டலில் என் முதலாவது எழுத்து சிறுவர் மலருக்காக எழுதப்பட்டது. அம்புலி மாமா சிறுவர் புத்தகத்தில் வந்த ஒரு கதையைத் தழுவலாகக் கொண்டு, 'எலிப்படை' என்ற வானொலி நாடகம்தான் எனது முதலாவது ஆக்கம். அதை மேலும் மெருபடுத்தி அழகியதொரு வானொலி நாடகமாக வானலைகளில் வானொலி மாமா ஒலிக்கவிட்டிருந்தபோது, எனக்கு வயது பத்து. என்பக்கதிலிருந்து அந்நாடகத்தைக் கேட்டுமகிழ அப்போது என் தாய் உயிரோடில்லை. அதை என் அருகிருந்து இரசித்துக் கேட்டு மகிழ்ந்தவர் என் சிறிய மாமா இராமசாமி சர்மா. என் படைப்புக்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எனைப் பாதித்த என் தாயும், அவள் தந்த வாசிப்பினால் பதிந்த சேயும், என் எண்ணங்களில், செயல்களில், இன்னமும் இணைந்தே வருகின்றார்கள்.

ஒரு குடும்பத்தில்  நிகழும் மங்கல நிகழ்வுகள் திட்டமிட்டு நிகழ்பவை. அதற்கான வளங்கள் அனைத்தும் படிமுறையாகச் சேகரிக்கப்படும். ஆனால் அமங்கலமான  மரணம் எதிர்பாரமல் சம்பவிக்கையில், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போகும். அப்போது அக் குடும்பத்திற்கான உதவி வழங்கல் குறித்து, சென்ற வாரத்தில்,  தம்பியொருவன் சமூகவலைத்தளத்தில், மாற்றி யோசிப்போம் என  ஒரு பதிவிட்டிருந்தான். நியாயமானதும் தேவையானதுமான சிந்தனையது.

இன்றைக்கு 50 வருடங்களின் முன்னரே அந்த மாற்று யோசனையைச்  செயலாக நெறிப்படுந்தியிருந்தார்கள் என் தாயும் அவள் தோழிகளும் என்பது ஆச்சர்யமான உண்மை . அம்மாவின் தலைமையில் ஒரு மாதரணி தம்பலகாமத்தில் இயங்கியது. பிரதோஷ விரதகாலங்களிலும், ஏனைய சிவ விரதங்களின் போதும், கோவிலில் பஜனை செய்வதாக, ஒரு சிவராத்தி நாளில்  ஒன்று சேர்ந்த இந்த அணியினர், சமூகத்திற்காக ஏதேனும் செய்ய எண்ணிய போது உருவானதுதான் அத் திட்டம். ஒரு தொகைப் பணத்தினை சேகரிப்பாக சேமித்துக் கொண்டார்கள்.

ஒரு வீட்டில் துயர் நடந்தால், அவ் வீட்டின் பக்கத்து வீடுவரைக்கும் அம்மா சென்றுவிடுவாள். அங்கிருந்து துயர்வீட்டின் உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசி, ஆகவேண்டிய செலவினங்களுக்கான உதவிகளை, தங்கள் சேகரிப்பிலிருந்து கொடுத்து, ஆறுதல் சொல்லி வருவாள். வீடு திரும்பியதும் நேரே கிணற்றடிக்குச் சென்று தலை முழுகிய பின், துயரவீட்டிற்கான உணவுத் தேவைகளுக்கான சமையல்களைச் செய்து,  உதவி செய்யக் கூடியவர்கள் மூலமாக அவற்றினைக் கொடுத்து அனுப்பவும் செய்வாள். துயரத்திலிருந்து அக் குடும்பம் மீண்டதன் பின்னதாக, செலவுக்குக் கொடுத்த தொகையினை, மாதாந்திரமாகத் திருப்பிச் செலுத்தும் வகையினை ஏற்படுத்துவாள். இதற்கு அவளுக்குப் பெருந்துணையாக இருந்தவர், என் பள்ளித் தோழி கௌசலா தேவி ரகுராமனின் தாயார் பாக்கியம் அக்கா.

இன்று நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது அரை நூற்றாண்டுகளுக்கு முன், அம் மாதரசிகள் எவ்வாறு சிந்தனையோடு செயற்பட்டிருக்கின்றார்கள் என்று. இந்த விடயம் அப்போது வீரகேசரி பத்திரிகையில் செய்தியாகவும் வந்திருந்தது. அதன் வெட்டுப் பிரதியும் என்னிடம் நீண்டகாலமாக இருந்தது.

அம்மாவின் தைரியம் குறித்து அம்மம்மா  ஒரு சம்பவம் சொல்வார்.  அம்மாவின் தந்தையார் இளவயதில் மறைந்துவிட, அம்மாவையும் , அவரது தம்பியும், எமது தாய்மாமானாருமாகிய இரத்தினசபாபதிக்குருக்களையும், ஆதரித்து வளர்த்தவர் அவர்களது பேரனார் சின்னையர். அவர் அனலைதீவில் காலமானபோது, எனது பெற்றோர்கள் அனலைதீவுக்கு வெளியே இருந்திருக்கிறார்கள். மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் வரும்போது, சின்னையரின் பூதவுடல் மையானம் சென்றுவிட்டது. ஆனால் அம்மா அவரின் முகத்தை தான் இறுதியாகப் பார்க்க வேண்டும் என பிடிவாதமாக மயானம் சென்று பார்த்தார் என அம்மம்மா சொல்வார்கள். அந் நாட்களில் பெண்கள் மையானம் செல்வதென்பது இல்லாத மரபு.

" மரபுக்குள் நின்று மரபை மீறல் " யுக்தி  உங்களுக்கு நன்கு தெரிகிறதென, என் செயற்பாடுகளுக்கான விமரிசனமாக,  அன்பிற்கினிய நண்பரும், ஆய்வாளருமான பற்றிமாகரன் கூறுவார். உண்மையில் அந்த வித்தையை அறிந்து கொண்டது என் தாயிடமிருந்துதான்.  புத்தகங்களை வாசி, ஆனால் புத்தகப்பூச்சியாக வாழ்ந்து விடாதேயென அறிவுறுத்தியவள் அம்மா. அறிந்து கொள்ளல், அனுபவங்களை உணர்ந்து செல்லல், என வாழ்க்கையை வாழ்ந்து செல்ல, அகரம் சொல்லித் தந்தவள் அம்மா.


அம்மாவின் இஷ்ட தெய்வம் அனலைதீவு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார். அம்மாவின் இறுதி மூச்சு பிரிகின்ற வேளையிலும், அவர் கூறியது பிள்ளையாரின் திருநாமம்தான். அம்மாவின் அந்தப் பிரார்த்தனையின் பிரார்த்துவம்தான் இன்று என் வாழ்வில் தொடர்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் எனக்கும், அப்பாவிற்கும், எங்கள் குடும்பத்தில் எல்லோர்க்கும் சிவன் பார்வதி மீதான பற்றுதலே அதிகம். அப்பாவின் வாழ்க்கைக் காலத்தில் அதிகம் பூஜை செய்ததும் சிவனுக்குத்தான். ஆனால் இந்தத் துறைக்குள் வரவே கூடாது என திடமான எண்ணம் கொண்டிருந்த என்னை, ஏதோ ஒன்று இழுத்து வந்து, தொடர்ச்சியாக  விநாயக வழிபாடு செய்விக்கிறது. தம்பலகாமத்தின் வில்வமரத்தடிப் பிள்ளையாரில் தொடங்கி, கிண்ணியா ஊற்றங்கரைப் பிள்ளையார், சுவிற்சர்லாந்தில் கூர் நவசக்தி விநாயகர், இத்தாலியில்  ஜெனோவா சித்தி விநாயகர்,  நாப்போலி விநாயகர் எனத் தொடரும் இறைபணியில், அம்மாவின் அருளாசியும், ஆத்ம தர்சனமும் மிகுந்திருப்பதாக நம்புகின்றேன்.

அம்மாவின் மறைவின் போது ஏதுமறியாதவனாக இருந்த எனக்கு இழப்பின் பயம் மட்டுமே இருந்தது. ஆனால் அம்மாவின் இழப்பின் வலி புரிந்து நான் கண்ணீர் விடுகையில் எனக்கு வயது முப்பது. அடுத்த வருடம் எமக்கு மகள் பிறந்தாள்.....


20/09/2018

திரு நாகேஸ்வரம் ( பிறந்த மண் )

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு) வான் தோற்றம் -
படம்: நன்றி : Pulendran Sulaxshan
பிறந்தமண் என்பது எல்லோர்க்கும் பிடித்தமானது. அதன் பெருமையைப் பேசுதல்,  மகிழ்ச்சியில் திளைத்தல் என்பது அதனிலும் மேலானது. தம்பலகாமம் குறித்து நாம் அதிகம் பேசுவதாலும், எழுதுவதாலும், அதிகம் சந்தித்த கேள்விகளில் ஒன்று " நீங்கள் தம்பலகாமமா.. திருகோணமலையா?". தம்பலகாமம் நாம் வளர்ந்த மண். பற்றும், படிப்பறிவும், வாழ்வும் தந்த மண். எமது தந்தையாரை, ராசா ஐயா என்றும், உறவுகள் மத்தியில் தம்பலகாமம் ராசா என்றும் அழைப்பது வழக்கம். அந்தளவிற்கு தம்பலகாமத்தின் அடையாளம் எங்கள் வாழ்வோடு ஒட்டியிருந்தது. அப்பாவின் இயற்பெயர்  நாகேஸ்வரன்.   எங்கள் குடும்பத்தின் ஏழாந் தலைமுறை, பரன் ஸ்தாபித்த சிவனின் திருநாமம். உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரியவன்,  ஒரு புற்றினடியில், நாகேஸ்வரனாகக் கோவில் கொண்டு, நல்லருள் பாலிக்கும் ஈழத்தில் நாகவழிபாட்டின் தொன்மைத் தலங்களில் ஒன்றான  திரு நாகேஸ்வரம் எமதுபிறந்த மண்.

ஈழத்தில் திருநாகேஸ்வரமா..? அது எங்கே இருக்கிறது ?அறியலாம் வாருங்கள்.....

- தாமோதர ஐயர் ஸ்தாபித்த மூலவர் -
 கடல் மார்க்கமாக தேசாந்திரியாகப் புறப்பட்ட, தாமோதர ஐயர் எனும் வேத பண்டிதர். தமிழகத்திலிருந்து  தான் எடுத்து வந்திருந்த தெய்வச் சிலைகளில் விநாயகரை, சங்கரநாத மகா கணபதியாக ஸ்தாபிக்கின்றார்.   புளியந்தீவு எனும் சிறு தீவில், தன்னிடமிருந்த சிவனை, நாகேஸ்வரனாகப் பிரதிஷ்டை செய்கின்றார். தொன்மைத் தமிழர் வழிபாடுகளில் ஒன்றான நாகவழிபாட்டினை, அத்தீவின் மக்கள் மேற்கொண்ட புளியந்தீவே ஈழத்தின் திரு நாகேஸ்வரம் .

 -  அரசின் மரத்தின் கீழ் காட்சிதரும் மணிபல்லவகாலத்து விக்கிரகம் -

பரம்பரை பரம்பரையாக என்று நாம்  சொல்லும் உறவு முறை வரிசையில், தந்தை+தாய், பாட்டன் + பாட்டி, பூட்டன் + பூட்டி, ஓட்டன் + ஓட்டி, சேயோன் + சேயோள், பரன் + பரை - எனும் ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த, இராமேஸ்வரத்து வேத பண்டிதரான, தாமோதர ஐயர், ஸ்தாபித்த நாகேஸ்வரனின் பெயர் என் தந்தையாருக்கும், ஸ்தாபித்த தாமோதர ஐயர் பெயர் என் சிறிய தந்தையாருக்கும் சூட்டப்பெற்றதாகக், குலப் பெரியவர்கள் சொல்வார்கள். பின்னாளில், வேதாகம சமஸ்கிருத பண்டிதராக பாண்டித்தியம் பெற்று, இலங்கை , இந்து கலாச்சார அமைச்சினால் மொறிசியஸ் நாட்டிற்குச் சென்று, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இநத் சமய வளர்ச்சிகான அரும்பணிகளை ஆற்றிவருபவர், ஏழாவது தலைமுறையில் வரும் மற்றொரு சிறிய தந்தையார். சிவஶ்ரீ. பாலசுப்ரமணியக் குருக்கள்.

 தாமோதர ஐயர் - பரன், கார்த்திகேசு ஐயர் - சேயோன், கதிரேசு ஐயர் - ஓட்டன், முத்தையர் - பூட்டன்,  சின்னையர் - பாட்டன், நடராஜக் குருக்கள் - தந்தை,  நாகேஸ்வரக் குருக்கள் எமது குடும்பத்தின் ஏழாந்தலைமுறை.

இலங்கையின் பூர்வீக தமிழ்மக்கள் நாக வழிபாடியற்றினார்கள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை தொடர்பில் பல்வேறு செவிவழிக்கதைகளும் உள்ளன. இங்கே நாம் பதிவு செய்வது, இத்தீவின் மக்களிடையே செவிவழிக் கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலம்.

முன்னொருகால் இத்தீவுக் கூட்டங்களின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், "வத்தை"  என்று சொல்லப்படும்,  பொதிகள் ஏற்றும் பாய்மரச் சரக்குப்படகில், பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இவ் இருபாறைகளையும், கருடன் குந்திய பாறை, அரவம் சுற்றிய பாறை என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒரு நாகம் வெளிப்பட்டு, மணிபல்லவம் என்றழைக்கப்பட்ட, நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். நீந்துகின்ற பாம்பின் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. இந்த அதிசயம் கண்ட, ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்பாள், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அந்த ஆலயமே இன்று பிரசித்தி பெற்று விளங்கும் நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலயமெனவும் அறியப்படுகிறது.

- நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் -
நயினாதீவு நாகபூசணியம்மனை அறிந்தவர்கள் பலரும் அறியாத கதையும், தெரியாத கோவிலும், திருநாகேஸ்வரம்.  சுயம்புவாக எழுந்த அம்மனின் தலைமேலே , அனுதினமும், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த அடியவர்கள்,  இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவின் தென்கரையிலிருந்து,  ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையில் அமைந்திருக்கும் சிறு தீவு புளியந்தீவு.

இப்புளியந்தீவில் கோவில் கொண்ட பெருமானார், இராமேஸ்வரத்திலிருந்து வந்த தாமோதர ஐயர் ஸ்தாபித்த நாகேஸ்வரன். இக்கோவிலின் வழிபாட்டு மூலம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்கும் இடத்திலமைந்த புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை. அதனாலேதான் நயினை அம்மனுக்கு நாகபூசணி எனும் திருநாமம்  வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா..? என்றெழும் கேள்விகளை விஞ்சி நிற்கிறது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. அது அவர்களை வாழ்விக்கிறது.

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு)  -
                                                                     படம்: நன்றி : Pulendran Sulaxshan

இந் நம்பிக்கை தொடர்பாக  ஒரு சுவையான அனுபவமும், கதையும் எமக்கும் உண்டு.

80களின் நடுப்பகுதிகளில், எமக்கு மகன் பிறந்து ஒரு வருடமாகியிருந்த வேளையில், எமது பரம்பரையினர் தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு மனைவி பிள்ளையுடன் சென்று வருமாறு எம் பெற்றோர்கள் கூறினார்கள். உள்நாட்டுப் போர் நடந்த அன்றைய சூழலில்,  சமாதான காலமாக அமைந்திருந்த தருணமொன்றில்,  மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் எம்மை யாரென்று அறிந்துகொண்டதின் பின் அக் கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதை கதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா? அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா? '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள்.

- சிவனும் சக்தியுமாக இனைந்த அரசும் வேம்பும் -
சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதே பெரியவர் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர் போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஏதோ ஒன்று புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் நான் நிலைகுலைந்து  தடுமாறினேன். பக்கத்தில் நின்ற மணியம் எனும் கோவில் பணியாளர்,  ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார் பெரியவர். இனியும் நம்பமாட்டீரோ? '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது வாயடைத்து நின்றேன்.

 - புற்றுறைப் பெருமானாக புளியந்தீவான் -
அருகே வந்த பெரியவர் சண்முகம், எம் தோள் தொட்டுத் தழுவி,  " நீ பிறந்ததே இந்தப் பெருமானின் பேரருளால்தான்.." எனத் தொடங்கி, என் பிறப்பின் கதை சொன்னார்.

" பாம்பிற்கு பால் வைக்காதே என எச்சரிப்பவர்கள் உண்டு. ஆனால் எங்கள் ஊரில் பால் வைத்து  வழிபடு. பாலகன் பிறப்பான்.. " என்பது பெரியோர் மறை வாக்கு. ஆன்றோர் வாக்குக்  கேட்டு, நீண்ட நாட்களாக குழந்தையற்றிருந்த என் தாய், புளியந்தீவு புற்றிலுறை அரவத்துக்கு, தினமும் காலை பால் வைத்து வழிபட்டார். அவ்வாறு அவர் வைக்கும் பாலை, அரவு குடிப்பதைக் கண்டிருந்த அவ்வூர் மக்கள், " அம்மா கலங்காதிரு. நாகேஸ்வரன் அருள்வார்.." என நம்பிக்கையூட்டியுள்ளார்கள். நம்பிக்கை பொய்க்காது நானும் பிறந்தேன்.

-  உறவோடு -
மூளாய் வைத்தியசாலையில் பிறந்த என்னைப் புளியந்தீவுக்கு கைக்குழந்தையாக எடுத்துச் செல்கையில், அதே தோணியில் அழகான ஒரு சர்ப்ப வாகனத்தையும் எடுத்துச்சென்று, புளியந்தீவு நாகேஸ்வரனுக்கு அர்ப்பணித்ததாக என் தாய்மாமன் சொல்வார். மிக ஆடம்பரமாக திருப்பணிசெய்த, புதிய கோவில் தேவையில்லையென, அரசமரத்தின் புற்றிலுறை அரவப்பெருமானகவே இன்றும் அருள்தருகின்றார். மூலவராக நாகேஸ்வரன் விளங்கும் இவ் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானின் திருக்கோலம் அலாதியான அழகுமிக்கது.

புளியந்தீவு எனுந் திரு நாகேஸ்வரத்தில், இதுவரை யாரையும் அரவு தீண்டியதில்லை என்பார்கள். அதே போல் அந்த ஆலயத்தைச் சூழவும் உள்ள தென்னந் தோப்புக்களில், விழுந்து கிடக்கும் தேங்காய்கள் உட்பட எப் பொருளையும் யாரும் தொடுவது கூட இல்லை. அவை அனைத்தும் நாகேஸ்வருனுக்கானது என்பது அவ்வூர் மரபு.

- உயிர் தந்தோன் பதம் போற்றி -
தருணம் வாய்க்கும் போதெல்லாம்  சென்று தரிசித்து வருகின்றேன். சென்று திரும்பும் போதெல்லாம் தாயின் மடியில், தந்தையின் தோளில், தலைசாய்த்திருந்த சுகம். செல்லும் போதெல்லாம் எம்மைப்பூஜை செய்ய வைத்து மகிழும், தற்போதைய ஆலய குரு நாராயணன் குருக்களின் அன்பும் அளவிடற்பாலது.

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், நாகதோஷத்திற்குட்பட்டதாக அறியப்பட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லதொரு நாகதோஷ பரிகாரத் தலம் புளியந்தீவு திருநாகேஸ்வரம். நயினாதீவு நாகபூசணியைத் தரிசிப்பவர்கள், அருகேயுள்ள புளியந்தீவு நாகேஸ்வரனையும் சென்று தரிசிப்பது நலமும், பலனும் தரும். எந்தப் பிரபலங்களுமின்றி, இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்த இத் திருத்தலத்தின் தீர்தம் சர்வரோக நிவாரணி என நம்பப்படுகிறது.

- அரசின்கீழே, அரவின் மேலே ஆடலரசன் -
சொந்த அனுபவத்தில், மனிவாசகருக்கு வாய்த்த திருப்பெருந்துறை போல் என்னை ஆட்கொண்டது புளியந்தீவு திரு நாகேஸ்வரம் எனும் அத் திருத்தலம்.  அதனால் சொல்வேன், ஒரு முறையல்ல இருமுறை பிறந்தேன் திரு நாகேஸ்வரத்தில்.
--------------------------------------------------------------------------------------------------------------------
- முன்னாள் பதிவாளர் நாயகமும், எமது மற்றுமொரு சிறிய தந்தையாருமாகிய நடராஜக் குருக்கள் சதாசிவ ஐயர், இப் பதிவினை நாம் வெளியிட்ட ஒரு சிலமணித்துளிகளிலேயே இப்பதிவில் முக்கிய திருத்தம் ஒன்று செய்யப்பட வேண்டிதைச் சுட்டிக் காட்டினார். வராலாறு  திரிபு படுத்தப்பட்டுவிடக் கூடாது எனும் அக்கறையோடு அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு மேலதிக இணைப்பாகச் சேர்த்துள்ளோம்.  அது மேலும் ஒரு சுவையான கதையாகவும், முக்கிய தகவலாகவும் அமைகிறது . -

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்  மணிபல்லவம் எனக் குறிப்பிடப்படும் நயினாதீவில் இருந்த கோவில் தொடர்பிலுள்ள புராதன கதையொன்றில், மணிபல்லவக் கோவிலின் கர்பக்கிரகத்தில் இருந்த சிவன் பார்வதி சிலைகள், அந்நியர் அழிப்பின் போது தாக்கப்பட, ஆலயத்தில் இருந்த பக்தர்கள் அவற்றினை திக்கொன்றாக எடுத்துச் சென்று பாதுகாத்தார்கள். அவ்வாறு பாது காத்த சிவனின் திருவுருவமே புளியந்தீவு நாகேஸ்வரன் கோவிலின் புராதன விக்கிரகம். பிரிந்திருந்த சிவனாரே நீளரவாக நீலக் கடல்தாண்டி, பூவோடு  நாகபூசணியிடம் சென்றார் எனவும் கர்ணபரம்பரை கதைகள் உண்டு.
 
பின்னாட்களில் நாகேஸ்வரனைப் பூஜித்த தாமோதர ஜயர், தவறுதலாக சிவனின் விக்கிரகத்தில் ஏற்பட்ட பின்னம் காரணமாக  மனமுடைந்து தேசாந்தரம் புறப்பட்டார் எனவும், அவ்வாறு சென்றவருக்கு தமிழகத்தில் , சிவாச்சாரியார் ஒருவர் ஆறுதலும், அறிவுரையும், சொல்லி வழங்கிய, விநாயகர், சிவன் திருவுருவங்களுடன் மறுபடியும் அனலைதீவு வந்து அவ்விக்கிரகங்களை முறையே அனலைதீவிலும், புளியந்தீவிலும், பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய வருகிறது. இதன் பிரகாரம்,நயினாதீவு நாகபூசணியம்மன் மூலவிக்கிரகமும், புளியந்தீவு நாகேஸ்வன் விக்கிரகமும் மணிபல்லவக் காலத்திற்குரியவை என்னும் வரலாற்று முக்கியத்துவம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.

இக் கோவிலின் மூல விக்கிரகம் தொடர்பில் சிறிய தந்தையார்  குறிப்பிட்ட கருத்திற்கு இணையான தகவலை, தற்போதைய ஆலயகுரு நாராயணன் குருக்களும் தொடர்பு கொண்டு  தெரிவித்தார்கள். அவர்கள் இருவரது கருத்துக்களின்படி, படக் குறிப்புக்களிலும் மாற்றம் செய்துள்ளோம்.

 இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள். 

13/09/2018

தமிழ் தந்த தாயே வாழி !

                                - தம்பலகாமம், ஆதி  கோணேஸ்வரா மகா வித்தியாலயம் -

கோடுகள் போட்ட பைஜாமா சட்டை, தலையில் தொப்பி, கையில் புல்லாங்குழல் சகிதமாக அரங்கில் ஒரு சின்னப் பையன்.  திரை விலகுகிறது. அவையைப் பார்த்ததும் பேசவேண்டிய வசனம் மறந்து போகிறது அவனுக்கு.  திரையை  மூடச்சொல்கிறார் ஆசான். அவனருகே வந்தவர், " நான் கீழே போய் நிற்கின்றேன். நீ என்னையே பார்க்க வேண்டும், என்னை  மட்டுமே பார்க்க வேண்டும்.." எனச் சொல்லிப் பதிலுக்குக் காத்திராதவராக, அரங்கிலிருந்து கீழிறங்கிச் சென்று விடுகிறார்.

திரை மறுபடியும் விலகுகிறது. ஆசானைத் தேடியவன்,  அவையின் முடிவில் காண்கின்றான். அங்கிருந்தவாறே தொடங்கு  எனக் கையசைக்கின்றார் அவர். "Good evening ladies and gentleman. I am Pied Piper of hamelin.. " சிறுவன்  பேசத் தொடங்கியதும், அவை மகிழ்ந்து ஆர்ப்பரிக்கிறது. அடுத்த சில நிமிடங்களுக்கு அவன் Piperராக  அரங்காடுகின்றான்.


                                 - கலை ஆசான் கவிஞர். சோ.ப எனும் சோ. பத்மநாதன் ஆசிரியர் -

அது  ஆதி கோணேஸ்வரா கலையரங்கு. ஆனால் அப்போது மகாவித்தியாலய கலை அரங்கு.  அரங்கேறிய அந்தக் கதை, The Pied Piper of hamelin. அரங்காற்றுவித்த ஆசான் கவிஞர் சோ.ப எனும் பத்மநாதன் ஆசிரியர். ஆங்கில அறிவுத் திறன் போட்டிக்கான, அந்தக்கதையினை, அரங்காற்றிய சிறுவன் நான். அப்போது எனக்கு வயது ஒன்பது. ஐம்பது ஆண்களுக்கு முன்னதான நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு நனவிடை தோய்தல் இது.

எழுத்து, பேச்சு, பாடல், கூத்து, பயிற்சி, அறிவு, நேயம், என எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்த கல்விச்சாலை,  தம்பலகாமம் மகா வித்தியாலயம். இப்போ ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம். தம்பலகாமத்தின் தனித்துவமே  கோணேஸ்வரப் பெருமானின் கோவில்தான். அவனன்றி அணுவும் அசையாது என்பது போல், அவ்வாலயத்தின் தொடர்பற்று  எதுவுமில்லை தம்பலகாமத்தில். ஏனெனில் தம்பலகாமத்தின் வரலாறே கோணைநாதனுடன் பின்னிப் பிணைந்ததுதானே.  அந்தவகையில் 2000ம் ஆண்டுகளில் மகாவித்தியாலயம், ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயமாக மாற்றம் பெற்றிருப்பது கூட  அழகும் பொருத்தமுமானதே.

கோணேஸ்வரப் பெருமான் சாமாகாண இசைப்பிரியன். அதனாற்தான் போலும் அந்த மண்ணில் அவ்வளவு கலைகள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம்  தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்த,  கல்வித்தாய் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம். எங்கள் அன்பு, அறிவு, ஆற்றல், மகிழ்வு, என எல்லாமுமாகி நின்ற எங்கள் தாய்க்கு இந்த வருடம் அகவை 100. இந்த நூற்றாண்டு காலப்பயணத்தில், கற்றவர்கள், கற்பித்தவர்கள் எனப் பலர் வித்தியாலயத்தின் பெருமடியில் தவழ்ந்து  சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமறிந்தது,  நமது கற்கைக்காலச் சூழல் மட்டுமே.

- வகுப்புத் தோழர்களில் சிலர் -

ஒவ்வொரு மனிதரினிதும் கல்லூரிக் காலங்களே,  வாழ்வின் வசந்தகாலங்கள். எங்கள் வசந்தத்தின் நினைவுகள் என்றும் மகாவித்தியாலமாக நிறைந்திருக்கக் காரணங்களும், காரியங்களுமெனப் பல கதைகளும், கதாமாந்தர்களுமுண்டு. கடந்து போன அந்தக் காலத்தின் நினைவுக் குறிப்புக்களில் மறக்கப்பட முடியாதவை அவை. முழுமையாக  அவற்றை  ஒரு கட்டுரையில் தொகுப்பது  சாத்தியமில்லையாயினும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்திற்கான தனித்துவம் எங்கள் காலத்தில் மிகுதியாக இருந்தது என்பேன்.  நகர்புறப் பாடசாலையாக இல்லாத போதும், நகர்புறப் பாடசாலைகளின் கல்வித் தரத்துக்கும், கலை, ஆற்றுகை  வெளிப்பாடுகளுக்கும், இணையாக இருந்தது எங்கள் வித்தியாலயம். அதற்கான முக்கிய காரணம்,  எங்கள் அதிபரும், ஆசிரியர்களும் தான். அவர்களில் பெரும்பாலோனோர் தம்பலகாம மண்ணின் மைந்தர்களாக இருந்தார்கள் என்பது  மேலும் சிறப்பான காரணம் எனலாம்.


அதிபர். பொன். சித்திரவேல் -

எங்கள் காலத்தின் அதிபர்  திரு. பொ. சித்திரவேல் அவர்கள்.  பெயரில் சித்திரம் அமைந்தது போன்றே, அவரது எழுத்தும், தோற்றமும். மிடுக்கும், மிகநேர்த்தியான பேச்சும் கொண்ட மாமனிதன். மரியாதைக்குரிய ஆசிரியர்கள்  கோபாலையா, தம்பையா, தம்பிராஜா,  அழகரெத்தினம், பத்மநாதன், ரகுராமன், வடிவேல், யூசுப், என அத்தனைபேரும் கற்பிக்கையில் கண்டிப்பான ஆசிரியர்கள். பாடம்  முடிந்தால் நட்புப் பாராட்டும் நல்லிதயம் கொண்டவர்கள். இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தனித் தனியாகச் சொல்ல ஏராளம்  உண்டு

எங்கள்  பாசத்திற்குரிய ஆசிரியைகள், கெங்காம்பிகை, கமலாதேவி, கனகம்மா, அமுதமலர், வனிதா, ஜீவா ரீச்சர் ஆகியோரின் அரும்பணிகள் குறித்து எவ்வளவு சொல்ல முடியும்.  மகளிருக்கான தனித்துவத்தை எங்கள் மனங்களின் பதியும் வகை  வாழ்ந்த  மாமணிகள் அவர்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கள் பிள்ளைகள் போல் கொண்டாடி மகிழ்ந்தவர்கள் எங்கள் ஆசிரியைகள் என்றால், அது மிகையல்ல.


- தாயின் மடியில் -
அதிபர் முதல், ஆசிரிய ஆசிரியைகள் வரை,  இவ்வாறு  இயல்பாக இருந்ததனால்தான், கல்வியைச் சுமையாகக் கருதாமல், சுகமாகக் கற்றோம். கலைகளை இயல்பாகப் பழகி, திறனாக வெளிப்படுத்தினோம். முத்தமிழ்விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், எதுவாயினும் சரி,   எங்கள் பாடசாலை முன்னணியிலும், முக்கியத்துவத்திலும் இருந்தது. அதன் மூலம் கற்ற வகையிலேயே, வாழ்வில் இயல்பான மனிதர்களாக இன்றுவரை எங்களால் வாழவும் முடிகிறது. இதை என்றும் மறப்போமா..? மறுப்போமா..?

பாடசாலை முடிந்து, வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு  நகர்ந்த போதும், அன்னை மடியெனத் திகழ்ந்த, கல்விக் கூடத்துக்கும் எமக்குமான பந்தம்  தொடர்ந்தே வந்தது. விழாக்கள், விஷேட ஒன்று கூடல்கள், விளையாட்டுப்போட்டிகள், என அத்தனை மகிழ்வுகளிலும், அன்போடு இணைந்தே இருந்தோம்.

- தமிழறிவித்தோர் முன்னிலையில் -

நாட்டின் சூழலும், காலமும், எங்களைத் தூக்கித் தூர வீசியதில், ஒற்றைப் பறவையாய், உதிரிப்பூக்களாய், எட்டுத் திசையும் சிதறி வீழ்ந்தோம். இப்போ,  பூமி பந்தின் ஒவ்வொரு சுழலிலும் இருந்து, எழுந்து வருகின்றோம், எங்கள் கல்வித் தாயின்  கலை நூற்றாண்டு நிறைவு காண.

உலகின் எந்த மூலையிருந்தாலும், எந்த நிலைகளிலிருந்தாலும், தம்பலகாமம் மகாவித்தியாலய மாணவர் எனும் மகிழ்வும், பெருமையும், இன்றளவும் உண்டு. இன்பத் தமிழாகி, மொழியாகி, எம்முள் கலந்திருக்கும் எங்கள் கல்வித் தாயே ! உன் பணியும், புகழும், இன்னும் பல நூற்றாண்டுகள் விரிந்து செல்ல உன் பிள்ளைகள் நாம் வாழ்த்தவில்லை, உன் வழி வருகின்றோம்.

நடந்தாய் வாழி   மாவலியாய், மாணிக்க கங்கையாய் !

 -----------------------------------------------------------------------------------------------------------------


தம்பலகாமம், ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம் எனும் எமது கல்விச்சாலையின் நூற்றாண்டு விழா மலருக்காக  எழுதப்பட்ட கட்டுரையிது. இக் கட்டுரையும், இவ்விழா தொடர்பில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டதும், பல ஆண்டுகளின் பின் தாயின் மடியில், தலைவைத்துப்  படுத்திருந்து, பசுமை நினைவுகளை மீட்டிப் பார்த்த பரமசுகம்.

எண்ணற்ற  நிகழ்வுகள் சந்தித்திருந்தாலும், எழுத்தறிவித்தவர்கள் முன்னிலையிலான அன்றைய ஆற்றுகை ளவிலா ஆனந்தம் தந்தது.
 இக் கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் குறித்தும், அவர்களுடனான அனுபவங்கள் குறித்தும் நிறையவே எழுதியுள்ளேன், இன்னும்  பகிர்வேன்.


கலை தந்த ஆசான் கவிஞர் சோ.ப அவர்களின் பார்வைக்கு இக் கட்டுரையை அனுப்பி வைக்க, அவர் எழுதிய மடல் அற்புதமான விருதாகச் சேர்ந்தது.

05/09/2018

திரு தம்பலேஸ்வரம் எங்கே ?

  
சிவபூமி எனச் சிறப்புப் பெற்றது இலங்கைத் திருநாடு. இங்கே  ஈஸ்வர தலங்களாகப் பல சிவாலயங்கள் இருக்கின்றன. இன்னும் பல இருந்திருக்கின்றன. அவ்வாறான சிவாலயங்கள் சிலவற்றின் இருப்பு மறைந்து  போயிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள்  இரு  ஈஸ்வர திருத்தலங்கள் பலராலும் குறிப்பிடப்படுகின்ற போதிலும், அவை தொடர்பில் முறையான தகவற் குறிப்புக்கள் பகிரப்படவில்லையென்றே கருதுகின்றேன். அவ்வாறு குறிக்கப்படும் அந்த இரு சிவத்தலங்கள் முறையே தொண்டீஸ்வரம், தம்பலேஸ்வரம், என்பனவாகும்.

இவற்றில் தொண்டீஸ்வரம், தென் இலங்கையில்  அமைந்திருந்தது என்பாரும், தம்பலேஸ்வரம் தென்னிலங்கையில் இருந்து மறைக்கப்பட்டது எனச் சொல்வாரும் உண்டு.  ஈழத்தமிழர் என்றல்லாது, தமிழர்கள் அனைவருமே அக்கறையோடு நோக்க வேண்டிய அல்லது தேட வேண்டிய சிவத்தலங்கள் இவை. வரலாற்றுச் சான்றுகளை வெறும் சமய அடையாளங்களாக மட்டுமே நோக்கிய ஒரு தவறால் நாம் இழந்த அருஞ்செல்வங்களில் இந்த ஈஸ்வரத் தலங்களும் அடங்கும்.


2006ம் ஆண்டில்  இணையத்தில் வலைப்பதிவுகள் மூலம் எம் எண்ணங்களைப் பதிவு செய்து வந்தபோது, திருத்தம்பலேஸ்வரம் குறித்துச் சில குறிப்புக்களைப் பதிவு செய்திருந்தோம். என் இளவயதில், தொலைந்து போன அந்தத் தொன்மையைத் தேடி அலைந்திருக்கின்றேன். காணாமற் போனதாகக் கருதப்படும் எமது தொன்மம் குறித்து  இங்கே சொல்லவிழைபவை, நாம் நேரடியாகச் சேகரித்த செவிவழிக்குறிப்புக்களும், விழிவழிப்பதிவுகளுமே. இதற்குமேல் அன்றைய பொழுதுகளில் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் எதுவுமிருக்கவில்லை. ஆதலால் இந்தப் பதிவில் நாம் கூறும் விடயங்கள் முடிந்த முடிவாக இல்லாவிடினும், நிச்சயம் ஒரு ஆரம்பத்தின் அடியெடுத்தலாக இருக்குமென்று நம்புகின்றோம். இனி; எமது பார்வையில் திரு தம்பலேஸ்வரம்...

திருத்தம்பலேஸ்வரம் எங்கே இருந்தது ?. திருகோணமலைக்குத் தென்மேற்கில் கந்தளாய்க்குப் பக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் எமது எண்ணம்.  இங்கே ஒரு மிகப்பெரிய சிவாலயமும் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிவாலயம் சோழ பரம்பரை மன்னர்களில் ஒருவரால் நிர்வப்பட்டிருக்கலாம், அல்லது புணருத்தாரனத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்த வானொலி உரையாடல் ஒன்றில், எமது ஆய்வாளரான நண்பரொருவர் சோழமன்னர்களின் திருப்பணி குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டதைக் கேட்டிருக்கின்றேன்.  இந்த ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதற்கு முன்னர் நடந்த இயற்கை அனர்த்தம் ஒன்றில் மறைந்து போயிருக்க வேண்டும். இவைகளை நிறுவுவதற்காக நாம் சொல்ல விரும்பும் குறிப்புக்களுக்குச் செல்ல முன் நாங்கள் இன்னுமோர் இடத்திற்குச் செல்ல வேண்டும். தம்பலகாமம் எனும் தமிழ்கிராமம் அது.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒரு காலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள். அப்படியான ஒரு திட்டுக்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம்.  அதனால் அந்த இடத்திற்க்கு கோவில்க் குடியிருப்பு என்று பெயர். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது எமது நம்பிக்கை.

- தம்பலகாமம் வான் வழித்தோற்றம் -
 
தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின் பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும். திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள் சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, கரைச்சித்திடல், முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு, முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும். கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு, குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகியவற்றினூடு சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும். இந்தக் குடியிருப்பிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும், தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.


- ஆதி கோணேஸ்வரர் கோவில் முன்னைய தோற்றம். -

கோயில்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின்  வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச் சற்று நோக்குவோம்.

இந் நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும் அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம் மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன் இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச் செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு, சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நாம் கருதுவதற்கு முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரை பெயர் முறைமைக்குள் காணப்படவில்லை. அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும், மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார். அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அது ஓரளவுக்கு நிதர்சனமாகிவிட்ட காலமிது.

இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில், எம் நண்பரொருவருடன் இணைந்து ஆராய்ந்தபோது, தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தோம். ஆச்சரியப்படத்தக்க உண்மைகள்  அப்போது தெரியவந்தன. அவ்வகராதியிலிருந்து, இப் பெயருக்குப் பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.


- கழனி சூழ் கோவில் -

தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல் என்பதாகும்.
தம்பலகாமம், வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என்பதனால்,   செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில், தொழிலாகு பெயராக, தம்பலகாமம் என வந்திருக்கலாம்.

தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையோடு பெருமளவு ஒத்துப்போகும். ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே. இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு, கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச் சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில் சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும். ஆதலால் இதனடிப்படையிலும், தம்பலகாமம் என வந்திருக்கக் கூடும்.

தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே.  அந்த மருதமரங்களின் நிழல் சுட்டி, என் வலைப்பக்கமொன்றிற்கு மருதநிழல் என்று பெயரிட்டிருந்தேன். வயல்நிலங்களின் கரைகளிலும், நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை. மருதமரங்கள் நின்றதனால், தம்பலகாமம் என வந்திருக்கலாம்.

தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச் சேற்றுத்தன்மைகொண்டதாகும்.

இப்படித் தமிழ்ச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்கையில், இப்பிரதேசம் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது. இப்படியான சிறப்புக்கள் பொருந்திய நிலத்தில் அமைந்த சிவன் ஆலயத்தின் பெயரால், இது திருத்தம்பலேஸ்வரம் என அழைக்கப்படிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இது தவிர முன்னர் குறிப்பிட்ட தம்பன் எனும் தலைவன் குறித்த வரலாறும் சுவாரசியமானது.


- கலிங்கமன்னன் - 
படம் நன்றி: ஜீவநதி 

கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.
ஆனால் கலிங்க விஜயவாகுவின் படைகளில், வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.

இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்( இப்போதுள்ள தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் எனச் சரித்திர நூல்களில் தகவல்கள் உள்ளதாக அறிய முடிகிறது.

தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாகவும்,  கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் என,  செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது.

இந்த ஆலயத்துக்கு அண்மையில், கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை  கலிங்க விஜயவாகு, அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசம் மிக்கவனாகவும் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, முறியடித்து, எதிரிகளைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று கலைத்த இடம்தான், பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை  எனவும் சொல்லப்படுகிறது.

கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மலைக் குன்றுப் பகுதியில்  உள்ள காடுகளில் அழிந்து போன கோட்டையின் சிதிலங்களும்,  கோட்டையைச் சுற்றிய நாற்புற  அகழி இருந்த அடையாளங்களும் காணப்படுவதாக, அப்பகுதிகளில் சென்று வந்தவர்கள் அறிவார்கள். இன்றளவும், சாமிமலைக்காடு என்றழைக்கப்படும், அப்பிரதேசத்திற்கு, தம்பலகாமம் பகுதி மக்கள், சந்தர்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் சென்று வருகிறார்கள். வழிபாடுகள் செய்து வருகின்றார்கள் என்றே தெரிய வருகிறது.

இப்பகுதியில் முக்கிய ஆலயம் ஒன்று இருந்திருக்க வேண்டும், அதுவே தம்பலேஸ்வரமாக இருக்க வேண்டும் என நாம் கருதுவதற்கு மற்றுமோர் முக்கிய காரணம், வரலாற்றுத் தொடர்புடைய கதையொன்றுண்டு.


- தொன்மை விக்கிரகம் -

 கோயிலும் சுனையும் கடலுடன் சூழ அமைந்திருந்த திருகோணேஸ்வரர் திருக்கோவிலை அந்நியர் இடித்தழித்தபோது, ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் பலவற்றை, ஆலயப்பணியாளர்கள் எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். அவ்வாறு மறைக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்று, பின்னாளில், சாமிமலைக்காட்டில் மரப்பொந்து ஒன்றிலிருந்து வெளிப்பட்டது. அந்த விக்கிரகமே,  தற்போது தம்பலகாமத்தில் உள்ள ஆதி கோணேஸ்வரர் கோவிலிலுள்ள புராதன விக்கிரகமான, கோணேஸ்வரர் விக்கிரகமாகும்.  இது தவிர வேறு பல புராதனப் பொருட்களும் இப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், அந்நியர் ஆக்கிரமிப்பிலிருந்து கோணேஸ்வரர் கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்ற முனைந்த மக்கள் , அவ்வாறு தாம் எடுத்துக் கொண்ட சிற்பங்களுடன், திருகோணமலையிலிருந்து தம்பன் கோட்டை  அல்லது தம்பலேஸ்வரத்தை நோக்கி வந்திருக்கின்றார்கள். வரும் வழியில் அவர்கள் இலக்கு எட்டப்படுவதற்கு முன் இயலாத ஏதோ காரணத்தால், அப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

இவ்வாறு நாம் கருதுவதற்கு இரு காரணங்களைச் சொல்வேன். ஒன்று தம்பன் எனும்  அதி பராக்கிரம படைத்தலைவனின் வீரம். மற்றையது வழிபாடியற்றிய மக்கள் தங்கள் வழிபாட்டுக் கடவுளர் சிற்பங்களை, சாதாரண இடங்களில் மறைக்கத் துணிந்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு அருகாயிருந்த ஏதோ ஒரு இறை சந்நிதியை நாடியே நகர்த்திருப்பார்கள். அது தம்பலேஸ்வரமாக இருந்திருக்கக் கூடும். அவ்வாறு நோக்கின் அழிந்துபோன கோட்டைச் சூழலில் அமைந்திருந்த ஆலயமே திருத் தம்பலேஸ்வரமாக இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எமது வலைப்பதிவுகளில் எழுதிய இந்தக் கட்டுரையை, மீள் திருத்தம் செய்து இங்கு பதிவு செய்துள்ளோம். இணையத்தில்  எழுதும் இவ்வாறான பதிவுகளை எத்தனை பேர் வாசிப்பார்கள் என அந்நாட்களில், எண்ணியதுண்டு. ஆனால் ஆச்சரியப்படத் தக்கவகையில் பல தரப்புக்களிலும், தளங்களிலும் இக் கட்டுரை கவனம் பெற்றிருந்தது. 


அன்மையில் தம்பலகாமம் சென்றிருந்த போது, அம் மண்ணின் மைந்தர்,  கலாபூசணம் ஆசிரியர் திரு. வே.தங்கராஜா அவர்கள், தான் எழுதிய "போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள்  இவர்கள்" எனும் நூலினைத் தந்திருந்தார்கள். அதிலே அந்த மண்ணின் மைந்தர்கள் பலரை நினைவு கூர்கையில்,  எம்மைப் பற்றிய குறிப்பொன்றினையும்  எழுதியிருந்தார்கள். 

 
அவ்வாறு அவர்கள் நினைவு கொள்வதற்கு, அந்த மண் குறித்து நாம் எழுதியுள்ள பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பதையும் இங்கு பதிவு செய்வதோடு, அவ்வாறு நினைவுகொண்டு குறிப்பெழுதிய ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...