30/08/2018

வில்வமரத்தடிப் பிள்ளையாரும், சங்குபதி ஆச்சியும் !

                                            
                                           - வில்வமரத்தடிப் பிள்ளையாரும், சிவனும் -

" ஐயா! எழும்பு; பிள்ளையார் காத்துக் கொண்டிருக்கிறார். வாய்யா பூசைக்கு!"   தலைமாட்டிலிருந்து அவனுக்குப் பிடித்தமான காலைத்தூக்கத்தைக் கலைக்க சங்குபதிஆச்சி தினமும் பாடுகின்ற பள்ளியெழுச்சிப் பாடல் வரிகள் அவை.  அவனுக்கு ஏழு,அல்லது எட்டு, வயதிருக்கும்.  தினமும் காலை நடக்கும் இந்தப் பள்ளியெழுச்சி  வைபவத்தைப் பார்த்து ரசித்துக் கடப்பார்கள் அவனின் பெற்றோர்கள்.

முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் முயன்று, அவன் காலைத் தூக்கத்தைக் கலைக்க சங்குபதி ஆச்சியால் மட்டும்தான் முடியும். நித்திரையால் எழுப்புவதுதோடு மடடுமல்லாது,   பல் துலக்கி, குளிக்க வார்த்து, அம்மா கொடுக்கும் சால்வையை, ஒல்லியான அவனுடம்புக்குத் தக்கவாறு வேட்டியாகக் கட்டி, விபூதி பூசி, வில்வமரத்தடிப்பிள்ளையார் கோவில் ஐயராக,  அரைமணி நேரத்தில் உருமாற்றிக் கொணரும் வல்லமை சங்குபதி ஆச்சிக்கு மட்டுமேயானது.

     - வில்வ மரங்களும், பொன்னலரி மரங்களுமற்ற இன்றைய வில்வமரத்தடிப் பிள்ளையார் -

தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோவில் வெளிவீதியின் வடக்குப்புறத்தில், உயர்ந்தோங்கிய  வில்வமரத்தின் கீழ், சிறுமாடத்தினுள் உருண்டை வடிவாகப் பிள்ளையார். அதனால் அவர் பெயர் வில்வமரத்தடிப் பிள்ளையார்.   கோணேஸ்வரர் கோவிலில் ஆகம வழிபாட்டிற்கு ஏற்றதல்லவென தீர்மானிக்கப்பட்ட சிதிலமடைந்த சிறிய சிவலிங்கம், அம்மன், வைரபரக் கடவுள், நாகதம்பிரான், ஆகிய தெய்வச் சிலைகளுடனானது அச் சிறு கோயில்.

தான் வளர்க்கும் இரு பசுக்கள் கொடுக்கும் பாலினை, சில வீடுகளுக்குக் கொடுத்துப் பெறும் பணம்தான் கைம்பெண்ணான சங்குபதி ஆச்சியின் பிரதான வருமானம். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்த பின் மீதமிருக்கும் பாலை, அளந்து பார்க்காது பிள்ளையாருக்குக்  கொடுக்கும் குணவதி.   ஒரு பெரிய குடத்தில் தண்ணீர், ஏனைய பூசைத்தளபாடங்கள் என்பனவற்றை, தன்  வீட்டிலிருந்து கொண்டு வந்திருப்பா.  திறந்தவெளி அரங்கம் போன்று,  வில்வ மரத்தடிப் பிள்ளையார் ஒரு திறந்த வெளிக்கோவில். அதற்கு நிர்வாக அலகோ, நிதிவருமானமோ இருந்ததில்லை.  சங்குபதி ஆச்சிதான் அந்த கோவிலின் சுயம்பு நிர்வாக மையம்.

நிர்வாகமும், நிதிநிலமையும் பெரிதாக இல்லை என்பதற்காக வில்வமரத்தடிப் பிள்ளையார் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல.  கோணேஸ்வரர் கோவிலின் திருவிழா நேரங்களிலும், கந்தசஷ்டி விரதபூர்த்தியின் போதும், கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான நேர்த்தி வழிபாடான பட்டுச்சாத்துதல் வழிபாட்டின் போதும், வில்வமரத்தடிப் பிள்ளையாரை யாரும் மறந்துவிடுவதில்லை.

                                                                               - சங்குபதி ஆச்சி -

சங்குபதி ஆச்சி தான் கொண்டுவந்த பாலையும், பெரிய குடத்தில் இருக்கும் தண்ணீரையும் மாற்றி மாற்றி சிறிய செம்பிலே எடுத்துக் கொடுக்க, எல்லா விக்கிரகங்களுக்கும் அவன் அபிஷேகம் செய்வான். பட்டுக்கள் தந்து அலங்காரம் செய்யச் சொல்லிவிட்டு,  சூழவும் நிற்கும் பொன்னலரி மரங்களிலிருந்து, அன்றலர்ந்த மலர்களைப் பெரிய தாம்பாளத்தில் அழகாகச் சேகரித்துத் தருவா. இவ்வளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, முதல்நாள் மாலை தான் துப்பரவாக்கியதின் பின் ஆலயச் சூழலை அசிங்கம் செய்த நாலுகால், இரண்டுகால் பிராணிகளுக்கு, தனியாவர்த்தனமாக ஏசல் பாடுவார். அதுதான் அவ பாடும் பஜனையாகவும், நாமாவளி யாகவும் இருக்கும்.

அலங்காரம் முடிந்தபின் பூஜை. சங்குபதி ஆச்சியே மணிஅடித்தபடி, தூபம், தீபம், கற்பூரம், எல்லாம் ஏற்றிக் கொடுப்பா.  தீபங்கள் காட்டிய பின்  கோணேஸ்வரர் கோவிலில் அவன் தந்தை சொல்லும் மந்திரங்களில் செவிவழியாக மனதில் பதிந்திருந்தவற்றை உச்சரிப்பான்.  அதுதான் வில்வமரத்தடிப் பிள்ளையாருக்கும், சங்குபதிஆச்சிக்கும், வேதமந்திரம்.

பூசை ஆரம்பிக்கும்போது சங்குபதி ஆச்சியும் அவனுந்தான் நிற்பார்கள்.   பூசை முடியும்போது, கோணேஸ்வரர் கோவில் காலைப்பூசைக்குச் செல்லும் அன்பர்கள் சிலரும் சேர்ந்திருப்பார்கள். வில்வமரத்தடிப் பிள்ளையார் ஆகமவழிபாட்டிற்குள் உட்படுத்தப்படாதவராக இருந்தாலும்,  கோணேஸ்வரப் பெருமானுக்கு முன், வில்வமரத்தடிப் பிள்ளையாருக்குத்தான்பூசை என்பது  எழுதாவழக்காக இருந்தது.  குறித்தநேரத்தில் பூஜைகள் நடைபெறுவதற்கு ஏற்றவகையில், குளக்கோட்டு மன்னனால் மிகப்பெரிய மானியத் தொழும்பாளர், செயற்கட்டமைப்பைக் கொண்ட  ஆதி கோணேஸ்வரர் தேவஸ்தானத்தின் காலைசந்திப்பூஜை,  எட்டுமணிக்கு ஆரம்பமாகும். அதற்குமுன் வில்வமரத்தடிப் பிள்ளையாரின்  பூஜையை, அவனும் சங்குபதிஆச்சியும், குறித்தநேரத்தில் நிறைவேற்றிவிடுவார்கள்.  காலை எட்டுமணிக்கு பாடசாலை செல்லவேண்டிய அவனுக்கு அது தேவையும் கூட.

கந்தசஷ்டி விரதபூர்த்தியின் , ஆறாம்நாள் சூரசங்காரத்தின் பின், இரவு ஆலயத்தில் கண்விழிக்கும் விரதகாரர்கள், வில்வமரத்தடிப்பிள்ளையாருக்கு, மோதகம் முதல் ஏனைய பலகாரங்களும் செய்வார்கள். மறு நாள் அதிகாலை, கோவிலின் அருகேயுள்ள ஆற்றில் அல்லது கிணற்றில் அதிகாலை தோய்ந்து நீராடிய பின், வில்வமரத்தடிப் பிள்ளையாரிடம் பூசைப் பொருட்களுடன் வருவார்கள்.  வழமைக்கு மாறாக சங்குபதி ஆச்சி பள்ளியெழுச்சி பாடாமலேயே அன்று அவனும் எழுந்திருப்பான். அதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு.


                           - திரு. தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் திருக்கோவில் -

கோணேஸ்வரர்கோவிலின் பிரதம குருவான அவன் தந்தையார் உட்பட கோவிலின் அனைத்துப் பணியாளர்களும் வில்வமரத்தடிப் பிள்ளையாரிடம் அன்று வருவார்கள். கோணேஸ்வரர் ஆலயத்தில் நித்திய பூஜைக்கு மங்களவாத்தியம் வாசிக்கும் பரமசிவம் ஐயா குழுவினர், மங்கலவாத்தியம் இசைப்பார்கள். ஆலயப் பணியாளர்கள்,அவனுக்கு பூஜையில் உதவுவார்கள். ஆனால் பூஜைமட்டும் அவனைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது.  சங்குபதி ஆச்சி வேறு யாரையும் பூசை செய்ய அனுமதிக்கமாட்டா. பிரதமகுருவான அவன் தந்தையாரும், ஏனைய குருமாரும் புன்னகைத்தவாறே மந்திரங்கள் சொல்வார்கள். அவன் பூசைசெய்வான்.  அவனுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியர்கள் சிலரும் அங்கு வழிபாடியற்றுவார்கள்.   அன்றைய   பூசையில் கிடைக்கும் அந்தப் பெருமிதமும், பரவசமுமே, அன்றைய பூஜைக்கான அவனது ஆர்வம்.

சங்குபதி ஆச்சியின் நாளாந்த நடவடிக்கைகள் என்னவோ சராசரியானவை போலவே தோன்றினாலும், வாழ்வியல் உண்மைகளும், ஒரு ஞானிக்கான பற்றறுத்தலும் உள்ளடங்கியிருந்தது. "இரண்டு  மாடுகளை வைச்சுக் கொண்டு இவ்வளவு பால்கறக்க முடியுமே? கொஞ்சம் கோணேசர்கோயில் கிணத்து தண்ணியும் சேர்ந்துதான்.."  என எழும், ஏளனக் குரல்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காத கரும சிந்தனைதான் ஆச்சியின் அசுர பலம்.
     
உறவுகளுடன் உரையாடும் பக்குவத்தோடு, பசுக்களோடு உரையாடுவார் ஆச்சி. ஆச்சியின் இன்ப துன்பப் பகிர்வுகளை,  பசுக்களும் அசைபோட்டுப் பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் ஆச்சி வேண்டும் அளவுக்கு, அல்லது ஆச்சிக்கு வேண்டும் அளவுக்கு பசுக்களும் பால் தந்தந்திருக்க வேண்டும். அதுவே ஆச்சியின் ஞானசித்தி.

ஆச்சி அன்று  என்னைத் துயில் எழுப்பித் தொடக்கி வைத்த விநாயகர் வழிபாடு, இன்று ஐரோப்பிய தேசங்கள் வரை தொடருகின்றது.  எங்கு சென்றாலும் விநாயகர் வழிபாடு எம்மைத் தொடர்ந்து வருகிறதே எனச் சிலவேளை நினைத்துக் கொள்வதுமுண்டு.  விநாயகர் மீதான என் அம்மாவின் பற்றுதல், ஆச்சியின் வழிநடத்தல் என்பதன் நீட்சிதான் அதற்கான காரணமாயிருக்கலாம் என்பதை  எண்ணிப் பார்பதும் உண்டு.

 சங்குபதி ஆச்சி எனும் பேரன்பிற்கும், பெருவுள்ளத்துக்கும் வந்தனங்கள்.

குறிப்பு: சங்குபதி ஆச்சி; இ.போ.ச. சாரதியாக இருந்த அமரர். இராஜகோபால் அவர்களின் தாயார்.

நன்றி: சங்குபதி ஆச்சியின் படம் தந்துதவியவர் அவரது  பேத்தியும், எமது பள்ளித் தோழியுமான, திருமதி கௌசல்யா இரகுராமன்.

29/08/2018

தியான நிலம்.


"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது" தத்துவாசிரியர் பிரான்சிஸ் பேகனின்   புகழ்வாய்ந்த ஒரு பொன்மொழி இது.

எழுதும் செயற்பாடு என்னளவில்  தியானம் போன்றது. எழுதுதல் எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் நான் எழுதுகின்றேன்.  பயணங்கள் எனக்குப் பாடங்கள் சொல்லித் தருகின்றன. ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தொடர்ந்து பயணிக்கின்றேன். இவை இரண்டும் தரும் அமைதியை, அனுபவத்தை, மகிழ்ச்சியை, மனமொருங்குதலை, இரசிக்கின்றேன்.

வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம். அவ்வாறு கடந்து செல்லும், அற்புத தருணங்களில் ஒரு சிலவற்றையாவது நாம் பதிவு செய்யமுடியும்.

அவ்வாறு பதிவு செய்வதற்காகவும், மீள் நினைவு கொண்டு பயனுறுவதற்காவும், என் வாழ்வில்,  சந்தித்த மாந்தர்கள், அறிவுறுத்திய வழிகாட்டிகள்,  குருமார்கள், பயணங்கள், படிப்பினைகள், பழகித் தெரிந்த  கலைகள், அறிந்து கொண்ட அனுபவங்கள், என எல்லாவற்றையும், இங்கே எழுதிப் பார்க்கின்றேன்... படிக்கின்றேன்... ஒரு கதை சொல்லியாக......

இது என்னை உள்ளுணர்ந்து கொள்ளும்  தியான நிலம்.

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...