20/03/2019

தலைமுறைகள் கதை


எனக்குப் பிடித்தமான மொழிகளில் ஒன்று சினிமா மொழி. காட்சி மொழியான இதன் மூலம் கதை சொல்லல் என்பது தனிப்பெரும் கலை.  இந்தக் கதையாடல் மூலம் வரலாற்றைச் சொல்லுதல், பதிவு செய்தல் என்பது,  தகவல் தொழில்நுட்ப காலமாக வர்ணிக்கப்படும் சமகாலத்தில் முக்கியமானது. ஆனால் அவ்வாறான காட்சி ஆவணப்படுத்தல் தமிழில் அருத்தலாகவே உள்ளது. அவ்வாறான முயற்சிகளுக்கு அனுசரணையும் மிகக் குறைவாகவே உள்ளது.


வெகுஜனச் சினிமாவினை விட, ஆவணச் சினிமா மீது எமக்கு அலாதியான பிரியம். அவ்வாறான சினிமாக்களைக் காணும் போதெல்லாம் கற்றலின் தளம் விசாலமாகும். தருணம் வாய்க்கும் போதெல்லாம் அவ்வாறான சினிமாக்களைக் காண்பதிலும், தமிழில் அவ்வாறான  முயற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அடுத்துவரும் பத்தாண்டு காலத்தில் உலகின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுக்க இருக்கிறது அதிகரிக்கும் முதியோர் விகிதம் என்கிறது ஆய்வுகள். முதியவர்களைப் பராமரிப்பது, மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பது, உடல் உள ஆரோக்கியங்களைப் பேணுவது, என்பவை தொடர்பில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என அகிலமெங்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுவிற்சர்லாந்தில் இயங்கும் முதியவர்களுக்கான முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று Connaissance 3. இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம், 60/65 வயதுகளின் பின் ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் தொடர்ந்து தாம் விரும்பும் விடயம் ஒன்றில் அறிவை விருத்தி செய்வதற்கு விரும்புகிறது. அது உல்லாசமாக குழுவாக சென்று ஒரு புதிய ஊரை அதன் இயற்கையை அறிந்தி கொள்வதாகவோ, புதிதாக ஒரு துறையை பற்றி தெரிந்து கொள்வதாகவோ, ஒரு கலையை படிப்பதாகவோ இருந்தால், அவர்களுக்கு அப்பல்கலைக்கழகம் உதவி செய்கிறது.

2018 ஆண்டு, இப்பல்கலைக் கழகத்தின் 20 வது வருட கொண்டாட்டத்தினை,  சுவிற்சர்லாந்தின் லுசான் மாநிலத்தில் உள்ள, ECAL எனும் நுன்கலைக் கல்லூரியுடன் இணைந்து நிகழ்த்த விரும்பியது. சினிமாவில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும் இளைஞர்களைக் கொண்டு 11 வித்தியாசமான குறுந்திரைப்படங்களை உருவாக்கி, குறித்த நாள் ஒன்றில் திரையிடுவது அதன் திட்டமாக இருந்தது.  இக்குறுந்திரைப்படங்கள், வயோதிபர்கள் பற்றிய இளைஞர்களின் மாற்றுப்பார்வை, வயோதிபர்களின் விருப்புக்கள், ஆற்றுகைகள் என்பவற்றை  மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அத்திட்டத்தின் கருதுகோளாக இருந்தது.

இக் கல்லூரி மாணவனான கீர்த்திகன் சிவகுமார் " தலைமுறைகள் " எனும் குறுந்திரைப்படப் பிரதியொன்றுடன் என்னிடம் வந்தார்.  புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களில் பலரும் தமது முதுமையின்போது தாயகத்தில் வாழ்வதற்குப் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். சமய வழிபாட்டுப் பாரம்பரியத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு, வயோதிபத்தில் தினசரி வழிபாடு சிறந்த மன ஆற்றுகையாக இருக்குமென்பதால், அது தினமும் கிடைக்கும் தமது சொந்த மண்ணைநோக்கி விரும்பிச் செல்வார்கள் எனும் கதை மூலம் கொண்டதாக இருந்தது. அக் கதையினை எங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்த முடியுமா? எந்த நாட்களில் அவ்வாறு செய்வது பொருத்தமாக இருக்கும் ? என்ற கேள்விகளையும் முன் வைத்தார்.


ஆலய நிர்வாகத்தினர் மனமுவந்து அனுமதி தந்தார்கள். மேற்குலகில் முதியவர்களுக்கு வழங்கப்படும், வண்ணங்கள், மலர்கள், மனதுக்கு உகந்த இசை, தாளலயம், என்பன  உள்ளடங்கிய  Snoezelen Room therapy எனும் பயிற்சிச் சிகிச்சை முறையினை ஒத்ததாக இருப்பது எமது கோவில்களும், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளுமாகும்.

எங்கள் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில்,  காட்சியும், கானமுமான காலமாக ஐயப்ப மண்டல பூர்த்திநாள் அமையும். அந்த ஆண்டில் (2017) வந்த {யப்ப மண்டல விரதபூர்த்தி நாளில்,  வழிபாட்டின் சூழலுக்கு இடையூறு இல்லாதவகையில் காட்சிப்படுத்த அறிவுறுத்தினேன். திட்டமிட்டவகையில் எல்லாம் நடந்தபோதும், கதை முக்கிய பாத்திரங்களான தாத்தா, பாட்டி, அன்றைய தினத்தில் வரமுடியாது போனது. சரி அவர்களின் காட்சிகளைப் பின்னர் படமாக்கலாம் என்று படப்பிடிப்பினை நடத்தினார்கள். ஆனால் அடுத்து வந்த காலப்பகுதியில் தாத்தா பாட்டி வருவது  சாத்தியமற்றுப் போனது.

எல்லா முயற்சியும் வீணாகப் போய்விடும் என்ற வருத்தமுடன் கீர்த்திகன் மீண்டும் தொடர்புகொண்டார். இந்த முயற்சி தொடர்வதற்கு உதவ வேண்டும் என்றார்.  " எடுக்கப்பட்ட காட்சிகளுள்  நீங்களும் அத்தையும், நிறைய இடங்களில் தென்படுகின்றீர்கள். ஆகவே  தாத்தா, பாட்டியாக, நீங்களும் அத்தையும், நடித்துத் தந்தால் இதனை முடிக்கலாம்... வேறு வழி தெரியவில்லை. எனது குழுவினரும் இதனையே  சொல்கின்றனர்" என்றார்.

அவரது படிப்பிற்கான தரவு, பலரது கூட்டுழைப்பு, இளையவர்களின் எதிர்பார்ப்பு,  என்பவற்றுகும் அப்பால், எங்கள் மொழி சார்ந்த முயற்சி ஒன்று முற்றுப் பெறாது போவது பெருந்துயர். இதைவிடவும் இன்னுமொரு விடயம் இதில் முக்கியமாக இருந்தது. இந்த மூலக்கதையோடு பின்னிப்பிணைந்து வருவது எங்கள்  ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய வரலாறு. அது காட்சி ஆவணமாவது தடைப்பட்டு விடுமே என்ற கவலையும் எமக்கிருந்தது. நாம் முயற்சிக்கலாம்  என எண்ணிய போது,  பெருந்தடையாக இருந்த தூரத்தினை ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினர்  நீக்கியுதவினர். இப் படத்தில் அருமையாக நடித்த மூன்று பிள்ளைகளின் மத்தியில், தாத்தா, பாட்டியாக நாமும் கதையமர்ந்தோம். " தலைமுறைகள் " உருவானது.

2018 ஏப்பிரல் 26ல், Casino mont benon, Allée Ernest-Ansermet 3, 1003 Lausanne
 ல் அமைந்துள்ள Salle Padewrewski திரையரங்கத்தில், நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், இத்திட்டத்தில் உருவாகிய ஏனைய பத்துப் படங்களுடன் " தலைமுறைகள் " படமும் திரையேறியது.

அன்று காட்சிப்படுத்தப்பட்ட படங்களில், சினிமா மொழிசார்ந்து என் விருப்பதுக்குரிய தெரிவாக வேறு படங்கள் இருந்தபோதும், பிரியத்துக்குரியதாக " தலைமுறைகள் " இருந்தது.  ஏனென்றால் அது எங்களின் கதை.  அதற்குள் இணைந்து வருவது எங்கள் ஆலயத்தின் கதையும் கூட. சுவிற்சர்லாந்தின் கலைக்கல்லூரி ஒன்றின் ஆவணக் காப்பகத்தில், காட்சி ஆவனமாக எங்கள் கதை பதிவாகியிருப்பது வரலாற்றுச் சாசனம். காலங்கள் பல கடந்தும், அங்கு  கல்வி  பயிலும் மாணவர் ஒருவர், இக் காட்சி ஆவணத்தைப் பார்க்கையில்; அது எம் கதை சொல்லும்.

Les Générations எனப் பிரெஞ்சு மொழியிலான தலைப்பில் " தலைமுறைகள் " படத்தினை இங்கு காணலாம்.

இத் திரையிடலில் என்னை மிகவும் கவர்ந்த இரு வேறு படங்கள் குறித்து இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.....

No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...