05/09/2018

திரு தம்பலேஸ்வரம் எங்கே ?

  
சிவபூமி எனச் சிறப்புப் பெற்றது இலங்கைத் திருநாடு. இங்கே  ஈஸ்வர தலங்களாகப் பல சிவாலயங்கள் இருக்கின்றன. இன்னும் பல இருந்திருக்கின்றன. அவ்வாறான சிவாலயங்கள் சிலவற்றின் இருப்பு மறைந்து  போயிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள்  இரு  ஈஸ்வர திருத்தலங்கள் பலராலும் குறிப்பிடப்படுகின்ற போதிலும், அவை தொடர்பில் முறையான தகவற் குறிப்புக்கள் பகிரப்படவில்லையென்றே கருதுகின்றேன். அவ்வாறு குறிக்கப்படும் அந்த இரு சிவத்தலங்கள் முறையே தொண்டீஸ்வரம், தம்பலேஸ்வரம், என்பனவாகும்.

இவற்றில் தொண்டீஸ்வரம், தென் இலங்கையில்  அமைந்திருந்தது என்பாரும், தம்பலேஸ்வரம் தென்னிலங்கையில் இருந்து மறைக்கப்பட்டது எனச் சொல்வாரும் உண்டு.  ஈழத்தமிழர் என்றல்லாது, தமிழர்கள் அனைவருமே அக்கறையோடு நோக்க வேண்டிய அல்லது தேட வேண்டிய சிவத்தலங்கள் இவை. வரலாற்றுச் சான்றுகளை வெறும் சமய அடையாளங்களாக மட்டுமே நோக்கிய ஒரு தவறால் நாம் இழந்த அருஞ்செல்வங்களில் இந்த ஈஸ்வரத் தலங்களும் அடங்கும்.


2006ம் ஆண்டில்  இணையத்தில் வலைப்பதிவுகள் மூலம் எம் எண்ணங்களைப் பதிவு செய்து வந்தபோது, திருத்தம்பலேஸ்வரம் குறித்துச் சில குறிப்புக்களைப் பதிவு செய்திருந்தோம். என் இளவயதில், தொலைந்து போன அந்தத் தொன்மையைத் தேடி அலைந்திருக்கின்றேன். காணாமற் போனதாகக் கருதப்படும் எமது தொன்மம் குறித்து  இங்கே சொல்லவிழைபவை, நாம் நேரடியாகச் சேகரித்த செவிவழிக்குறிப்புக்களும், விழிவழிப்பதிவுகளுமே. இதற்குமேல் அன்றைய பொழுதுகளில் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் எதுவுமிருக்கவில்லை. ஆதலால் இந்தப் பதிவில் நாம் கூறும் விடயங்கள் முடிந்த முடிவாக இல்லாவிடினும், நிச்சயம் ஒரு ஆரம்பத்தின் அடியெடுத்தலாக இருக்குமென்று நம்புகின்றோம். இனி; எமது பார்வையில் திரு தம்பலேஸ்வரம்...

திருத்தம்பலேஸ்வரம் எங்கே இருந்தது ?. திருகோணமலைக்குத் தென்மேற்கில் கந்தளாய்க்குப் பக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் எமது எண்ணம்.  இங்கே ஒரு மிகப்பெரிய சிவாலயமும் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிவாலயம் சோழ பரம்பரை மன்னர்களில் ஒருவரால் நிர்வப்பட்டிருக்கலாம், அல்லது புணருத்தாரனத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்த வானொலி உரையாடல் ஒன்றில், எமது ஆய்வாளரான நண்பரொருவர் சோழமன்னர்களின் திருப்பணி குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டதைக் கேட்டிருக்கின்றேன்.  இந்த ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதற்கு முன்னர் நடந்த இயற்கை அனர்த்தம் ஒன்றில் மறைந்து போயிருக்க வேண்டும். இவைகளை நிறுவுவதற்காக நாம் சொல்ல விரும்பும் குறிப்புக்களுக்குச் செல்ல முன் நாங்கள் இன்னுமோர் இடத்திற்குச் செல்ல வேண்டும். தம்பலகாமம் எனும் தமிழ்கிராமம் அது.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒரு காலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள். அப்படியான ஒரு திட்டுக்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம்.  அதனால் அந்த இடத்திற்க்கு கோவில்க் குடியிருப்பு என்று பெயர். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது எமது நம்பிக்கை.

- தம்பலகாமம் வான் வழித்தோற்றம் -
 
தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின் பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும். திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள் சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, கரைச்சித்திடல், முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு, முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும். கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு, குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகியவற்றினூடு சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும். இந்தக் குடியிருப்பிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும், தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.


- ஆதி கோணேஸ்வரர் கோவில் முன்னைய தோற்றம். -

கோயில்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின்  வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச் சற்று நோக்குவோம்.

இந் நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும் அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம் மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன் இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச் செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு, சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நாம் கருதுவதற்கு முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரை பெயர் முறைமைக்குள் காணப்படவில்லை. அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும், மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார். அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அது ஓரளவுக்கு நிதர்சனமாகிவிட்ட காலமிது.

இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில், எம் நண்பரொருவருடன் இணைந்து ஆராய்ந்தபோது, தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தோம். ஆச்சரியப்படத்தக்க உண்மைகள்  அப்போது தெரியவந்தன. அவ்வகராதியிலிருந்து, இப் பெயருக்குப் பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.


- கழனி சூழ் கோவில் -

தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல் என்பதாகும்.
தம்பலகாமம், வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என்பதனால்,   செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில், தொழிலாகு பெயராக, தம்பலகாமம் என வந்திருக்கலாம்.

தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையோடு பெருமளவு ஒத்துப்போகும். ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே. இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு, கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச் சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில் சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும். ஆதலால் இதனடிப்படையிலும், தம்பலகாமம் என வந்திருக்கக் கூடும்.

தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே.  அந்த மருதமரங்களின் நிழல் சுட்டி, என் வலைப்பக்கமொன்றிற்கு மருதநிழல் என்று பெயரிட்டிருந்தேன். வயல்நிலங்களின் கரைகளிலும், நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை. மருதமரங்கள் நின்றதனால், தம்பலகாமம் என வந்திருக்கலாம்.

தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச் சேற்றுத்தன்மைகொண்டதாகும்.

இப்படித் தமிழ்ச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்கையில், இப்பிரதேசம் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது. இப்படியான சிறப்புக்கள் பொருந்திய நிலத்தில் அமைந்த சிவன் ஆலயத்தின் பெயரால், இது திருத்தம்பலேஸ்வரம் என அழைக்கப்படிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இது தவிர முன்னர் குறிப்பிட்ட தம்பன் எனும் தலைவன் குறித்த வரலாறும் சுவாரசியமானது.


- கலிங்கமன்னன் - 
படம் நன்றி: ஜீவநதி 

கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.
ஆனால் கலிங்க விஜயவாகுவின் படைகளில், வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.

இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்( இப்போதுள்ள தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் எனச் சரித்திர நூல்களில் தகவல்கள் உள்ளதாக அறிய முடிகிறது.

தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாகவும்,  கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் என,  செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது.

இந்த ஆலயத்துக்கு அண்மையில், கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை  கலிங்க விஜயவாகு, அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசம் மிக்கவனாகவும் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, முறியடித்து, எதிரிகளைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று கலைத்த இடம்தான், பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை  எனவும் சொல்லப்படுகிறது.

கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மலைக் குன்றுப் பகுதியில்  உள்ள காடுகளில் அழிந்து போன கோட்டையின் சிதிலங்களும்,  கோட்டையைச் சுற்றிய நாற்புற  அகழி இருந்த அடையாளங்களும் காணப்படுவதாக, அப்பகுதிகளில் சென்று வந்தவர்கள் அறிவார்கள். இன்றளவும், சாமிமலைக்காடு என்றழைக்கப்படும், அப்பிரதேசத்திற்கு, தம்பலகாமம் பகுதி மக்கள், சந்தர்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் சென்று வருகிறார்கள். வழிபாடுகள் செய்து வருகின்றார்கள் என்றே தெரிய வருகிறது.

இப்பகுதியில் முக்கிய ஆலயம் ஒன்று இருந்திருக்க வேண்டும், அதுவே தம்பலேஸ்வரமாக இருக்க வேண்டும் என நாம் கருதுவதற்கு மற்றுமோர் முக்கிய காரணம், வரலாற்றுத் தொடர்புடைய கதையொன்றுண்டு.


- தொன்மை விக்கிரகம் -

 கோயிலும் சுனையும் கடலுடன் சூழ அமைந்திருந்த திருகோணேஸ்வரர் திருக்கோவிலை அந்நியர் இடித்தழித்தபோது, ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் பலவற்றை, ஆலயப்பணியாளர்கள் எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். அவ்வாறு மறைக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்று, பின்னாளில், சாமிமலைக்காட்டில் மரப்பொந்து ஒன்றிலிருந்து வெளிப்பட்டது. அந்த விக்கிரகமே,  தற்போது தம்பலகாமத்தில் உள்ள ஆதி கோணேஸ்வரர் கோவிலிலுள்ள புராதன விக்கிரகமான, கோணேஸ்வரர் விக்கிரகமாகும்.  இது தவிர வேறு பல புராதனப் பொருட்களும் இப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், அந்நியர் ஆக்கிரமிப்பிலிருந்து கோணேஸ்வரர் கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்ற முனைந்த மக்கள் , அவ்வாறு தாம் எடுத்துக் கொண்ட சிற்பங்களுடன், திருகோணமலையிலிருந்து தம்பன் கோட்டை  அல்லது தம்பலேஸ்வரத்தை நோக்கி வந்திருக்கின்றார்கள். வரும் வழியில் அவர்கள் இலக்கு எட்டப்படுவதற்கு முன் இயலாத ஏதோ காரணத்தால், அப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

இவ்வாறு நாம் கருதுவதற்கு இரு காரணங்களைச் சொல்வேன். ஒன்று தம்பன் எனும்  அதி பராக்கிரம படைத்தலைவனின் வீரம். மற்றையது வழிபாடியற்றிய மக்கள் தங்கள் வழிபாட்டுக் கடவுளர் சிற்பங்களை, சாதாரண இடங்களில் மறைக்கத் துணிந்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு அருகாயிருந்த ஏதோ ஒரு இறை சந்நிதியை நாடியே நகர்த்திருப்பார்கள். அது தம்பலேஸ்வரமாக இருந்திருக்கக் கூடும். அவ்வாறு நோக்கின் அழிந்துபோன கோட்டைச் சூழலில் அமைந்திருந்த ஆலயமே திருத் தம்பலேஸ்வரமாக இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எமது வலைப்பதிவுகளில் எழுதிய இந்தக் கட்டுரையை, மீள் திருத்தம் செய்து இங்கு பதிவு செய்துள்ளோம். இணையத்தில்  எழுதும் இவ்வாறான பதிவுகளை எத்தனை பேர் வாசிப்பார்கள் என அந்நாட்களில், எண்ணியதுண்டு. ஆனால் ஆச்சரியப்படத் தக்கவகையில் பல தரப்புக்களிலும், தளங்களிலும் இக் கட்டுரை கவனம் பெற்றிருந்தது. 


அன்மையில் தம்பலகாமம் சென்றிருந்த போது, அம் மண்ணின் மைந்தர்,  கலாபூசணம் ஆசிரியர் திரு. வே.தங்கராஜா அவர்கள், தான் எழுதிய "போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள்  இவர்கள்" எனும் நூலினைத் தந்திருந்தார்கள். அதிலே அந்த மண்ணின் மைந்தர்கள் பலரை நினைவு கூர்கையில்,  எம்மைப் பற்றிய குறிப்பொன்றினையும்  எழுதியிருந்தார்கள். 

 
அவ்வாறு அவர்கள் நினைவு கொள்வதற்கு, அந்த மண் குறித்து நாம் எழுதியுள்ள பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பதையும் இங்கு பதிவு செய்வதோடு, அவ்வாறு நினைவுகொண்டு குறிப்பெழுதிய ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...