20/09/2018

திரு நாகேஸ்வரம் ( பிறந்த மண் )

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு) வான் தோற்றம் -
படம்: நன்றி : Pulendran Sulaxshan
பிறந்தமண் என்பது எல்லோர்க்கும் பிடித்தமானது. அதன் பெருமையைப் பேசுதல்,  மகிழ்ச்சியில் திளைத்தல் என்பது அதனிலும் மேலானது. தம்பலகாமம் குறித்து நாம் அதிகம் பேசுவதாலும், எழுதுவதாலும், அதிகம் சந்தித்த கேள்விகளில் ஒன்று " நீங்கள் தம்பலகாமமா.. திருகோணமலையா?". தம்பலகாமம் நாம் வளர்ந்த மண். பற்றும், படிப்பறிவும், வாழ்வும் தந்த மண். எமது தந்தையாரை, ராசா ஐயா என்றும், உறவுகள் மத்தியில் தம்பலகாமம் ராசா என்றும் அழைப்பது வழக்கம். அந்தளவிற்கு தம்பலகாமத்தின் அடையாளம் எங்கள் வாழ்வோடு ஒட்டியிருந்தது. அப்பாவின் இயற்பெயர்  நாகேஸ்வரன்.   எங்கள் குடும்பத்தின் ஏழாந் தலைமுறை, பரன் ஸ்தாபித்த சிவனின் திருநாமம். உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரியவன்,  ஒரு புற்றினடியில், நாகேஸ்வரனாகக் கோவில் கொண்டு, நல்லருள் பாலிக்கும் ஈழத்தில் நாகவழிபாட்டின் தொன்மைத் தலங்களில் ஒன்றான  திரு நாகேஸ்வரம் எமதுபிறந்த மண்.

ஈழத்தில் திருநாகேஸ்வரமா..? அது எங்கே இருக்கிறது ?அறியலாம் வாருங்கள்.....

- தாமோதர ஐயர் ஸ்தாபித்த மூலவர் -
 கடல் மார்க்கமாக தேசாந்திரியாகப் புறப்பட்ட, தாமோதர ஐயர் எனும் வேத பண்டிதர். தமிழகத்திலிருந்து  தான் எடுத்து வந்திருந்த தெய்வச் சிலைகளில் விநாயகரை, சங்கரநாத மகா கணபதியாக ஸ்தாபிக்கின்றார்.   புளியந்தீவு எனும் சிறு தீவில், தன்னிடமிருந்த சிவனை, நாகேஸ்வரனாகப் பிரதிஷ்டை செய்கின்றார். தொன்மைத் தமிழர் வழிபாடுகளில் ஒன்றான நாகவழிபாட்டினை, அத்தீவின் மக்கள் மேற்கொண்ட புளியந்தீவே ஈழத்தின் திரு நாகேஸ்வரம் .

 -  அரசின் மரத்தின் கீழ் காட்சிதரும் மணிபல்லவகாலத்து விக்கிரகம் -

பரம்பரை பரம்பரையாக என்று நாம்  சொல்லும் உறவு முறை வரிசையில், தந்தை+தாய், பாட்டன் + பாட்டி, பூட்டன் + பூட்டி, ஓட்டன் + ஓட்டி, சேயோன் + சேயோள், பரன் + பரை - எனும் ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த, இராமேஸ்வரத்து வேத பண்டிதரான, தாமோதர ஐயர், ஸ்தாபித்த நாகேஸ்வரனின் பெயர் என் தந்தையாருக்கும், ஸ்தாபித்த தாமோதர ஐயர் பெயர் என் சிறிய தந்தையாருக்கும் சூட்டப்பெற்றதாகக், குலப் பெரியவர்கள் சொல்வார்கள். பின்னாளில், வேதாகம சமஸ்கிருத பண்டிதராக பாண்டித்தியம் பெற்று, இலங்கை , இந்து கலாச்சார அமைச்சினால் மொறிசியஸ் நாட்டிற்குச் சென்று, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இநத் சமய வளர்ச்சிகான அரும்பணிகளை ஆற்றிவருபவர், ஏழாவது தலைமுறையில் வரும் மற்றொரு சிறிய தந்தையார். சிவஶ்ரீ. பாலசுப்ரமணியக் குருக்கள்.

 தாமோதர ஐயர் - பரன், கார்த்திகேசு ஐயர் - சேயோன், கதிரேசு ஐயர் - ஓட்டன், முத்தையர் - பூட்டன்,  சின்னையர் - பாட்டன், நடராஜக் குருக்கள் - தந்தை,  நாகேஸ்வரக் குருக்கள் எமது குடும்பத்தின் ஏழாந்தலைமுறை.

இலங்கையின் பூர்வீக தமிழ்மக்கள் நாக வழிபாடியற்றினார்கள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை தொடர்பில் பல்வேறு செவிவழிக்கதைகளும் உள்ளன. இங்கே நாம் பதிவு செய்வது, இத்தீவின் மக்களிடையே செவிவழிக் கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலம்.

முன்னொருகால் இத்தீவுக் கூட்டங்களின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், "வத்தை"  என்று சொல்லப்படும்,  பொதிகள் ஏற்றும் பாய்மரச் சரக்குப்படகில், பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இவ் இருபாறைகளையும், கருடன் குந்திய பாறை, அரவம் சுற்றிய பாறை என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒரு நாகம் வெளிப்பட்டு, மணிபல்லவம் என்றழைக்கப்பட்ட, நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். நீந்துகின்ற பாம்பின் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. இந்த அதிசயம் கண்ட, ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்பாள், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அந்த ஆலயமே இன்று பிரசித்தி பெற்று விளங்கும் நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலயமெனவும் அறியப்படுகிறது.

- நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் -
நயினாதீவு நாகபூசணியம்மனை அறிந்தவர்கள் பலரும் அறியாத கதையும், தெரியாத கோவிலும், திருநாகேஸ்வரம்.  சுயம்புவாக எழுந்த அம்மனின் தலைமேலே , அனுதினமும், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த அடியவர்கள்,  இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவின் தென்கரையிலிருந்து,  ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையில் அமைந்திருக்கும் சிறு தீவு புளியந்தீவு.

இப்புளியந்தீவில் கோவில் கொண்ட பெருமானார், இராமேஸ்வரத்திலிருந்து வந்த தாமோதர ஐயர் ஸ்தாபித்த நாகேஸ்வரன். இக்கோவிலின் வழிபாட்டு மூலம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்கும் இடத்திலமைந்த புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை. அதனாலேதான் நயினை அம்மனுக்கு நாகபூசணி எனும் திருநாமம்  வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா..? என்றெழும் கேள்விகளை விஞ்சி நிற்கிறது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. அது அவர்களை வாழ்விக்கிறது.

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு)  -
                                                                     படம்: நன்றி : Pulendran Sulaxshan

இந் நம்பிக்கை தொடர்பாக  ஒரு சுவையான அனுபவமும், கதையும் எமக்கும் உண்டு.

80களின் நடுப்பகுதிகளில், எமக்கு மகன் பிறந்து ஒரு வருடமாகியிருந்த வேளையில், எமது பரம்பரையினர் தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு மனைவி பிள்ளையுடன் சென்று வருமாறு எம் பெற்றோர்கள் கூறினார்கள். உள்நாட்டுப் போர் நடந்த அன்றைய சூழலில்,  சமாதான காலமாக அமைந்திருந்த தருணமொன்றில்,  மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் எம்மை யாரென்று அறிந்துகொண்டதின் பின் அக் கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதை கதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா? அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா? '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள்.

- சிவனும் சக்தியுமாக இனைந்த அரசும் வேம்பும் -
சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதே பெரியவர் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர் போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஏதோ ஒன்று புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் நான் நிலைகுலைந்து  தடுமாறினேன். பக்கத்தில் நின்ற மணியம் எனும் கோவில் பணியாளர்,  ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார் பெரியவர். இனியும் நம்பமாட்டீரோ? '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது வாயடைத்து நின்றேன்.

 - புற்றுறைப் பெருமானாக புளியந்தீவான் -
அருகே வந்த பெரியவர் சண்முகம், எம் தோள் தொட்டுத் தழுவி,  " நீ பிறந்ததே இந்தப் பெருமானின் பேரருளால்தான்.." எனத் தொடங்கி, என் பிறப்பின் கதை சொன்னார்.

" பாம்பிற்கு பால் வைக்காதே என எச்சரிப்பவர்கள் உண்டு. ஆனால் எங்கள் ஊரில் பால் வைத்து  வழிபடு. பாலகன் பிறப்பான்.. " என்பது பெரியோர் மறை வாக்கு. ஆன்றோர் வாக்குக்  கேட்டு, நீண்ட நாட்களாக குழந்தையற்றிருந்த என் தாய், புளியந்தீவு புற்றிலுறை அரவத்துக்கு, தினமும் காலை பால் வைத்து வழிபட்டார். அவ்வாறு அவர் வைக்கும் பாலை, அரவு குடிப்பதைக் கண்டிருந்த அவ்வூர் மக்கள், " அம்மா கலங்காதிரு. நாகேஸ்வரன் அருள்வார்.." என நம்பிக்கையூட்டியுள்ளார்கள். நம்பிக்கை பொய்க்காது நானும் பிறந்தேன்.

-  உறவோடு -
மூளாய் வைத்தியசாலையில் பிறந்த என்னைப் புளியந்தீவுக்கு கைக்குழந்தையாக எடுத்துச் செல்கையில், அதே தோணியில் அழகான ஒரு சர்ப்ப வாகனத்தையும் எடுத்துச்சென்று, புளியந்தீவு நாகேஸ்வரனுக்கு அர்ப்பணித்ததாக என் தாய்மாமன் சொல்வார். மிக ஆடம்பரமாக திருப்பணிசெய்த, புதிய கோவில் தேவையில்லையென, அரசமரத்தின் புற்றிலுறை அரவப்பெருமானகவே இன்றும் அருள்தருகின்றார். மூலவராக நாகேஸ்வரன் விளங்கும் இவ் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானின் திருக்கோலம் அலாதியான அழகுமிக்கது.

புளியந்தீவு எனுந் திரு நாகேஸ்வரத்தில், இதுவரை யாரையும் அரவு தீண்டியதில்லை என்பார்கள். அதே போல் அந்த ஆலயத்தைச் சூழவும் உள்ள தென்னந் தோப்புக்களில், விழுந்து கிடக்கும் தேங்காய்கள் உட்பட எப் பொருளையும் யாரும் தொடுவது கூட இல்லை. அவை அனைத்தும் நாகேஸ்வருனுக்கானது என்பது அவ்வூர் மரபு.

- உயிர் தந்தோன் பதம் போற்றி -
தருணம் வாய்க்கும் போதெல்லாம்  சென்று தரிசித்து வருகின்றேன். சென்று திரும்பும் போதெல்லாம் தாயின் மடியில், தந்தையின் தோளில், தலைசாய்த்திருந்த சுகம். செல்லும் போதெல்லாம் எம்மைப்பூஜை செய்ய வைத்து மகிழும், தற்போதைய ஆலய குரு நாராயணன் குருக்களின் அன்பும் அளவிடற்பாலது.

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், நாகதோஷத்திற்குட்பட்டதாக அறியப்பட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லதொரு நாகதோஷ பரிகாரத் தலம் புளியந்தீவு திருநாகேஸ்வரம். நயினாதீவு நாகபூசணியைத் தரிசிப்பவர்கள், அருகேயுள்ள புளியந்தீவு நாகேஸ்வரனையும் சென்று தரிசிப்பது நலமும், பலனும் தரும். எந்தப் பிரபலங்களுமின்றி, இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்த இத் திருத்தலத்தின் தீர்தம் சர்வரோக நிவாரணி என நம்பப்படுகிறது.

- அரசின்கீழே, அரவின் மேலே ஆடலரசன் -
சொந்த அனுபவத்தில், மனிவாசகருக்கு வாய்த்த திருப்பெருந்துறை போல் என்னை ஆட்கொண்டது புளியந்தீவு திரு நாகேஸ்வரம் எனும் அத் திருத்தலம்.  அதனால் சொல்வேன், ஒரு முறையல்ல இருமுறை பிறந்தேன் திரு நாகேஸ்வரத்தில்.
--------------------------------------------------------------------------------------------------------------------
- முன்னாள் பதிவாளர் நாயகமும், எமது மற்றுமொரு சிறிய தந்தையாருமாகிய நடராஜக் குருக்கள் சதாசிவ ஐயர், இப் பதிவினை நாம் வெளியிட்ட ஒரு சிலமணித்துளிகளிலேயே இப்பதிவில் முக்கிய திருத்தம் ஒன்று செய்யப்பட வேண்டிதைச் சுட்டிக் காட்டினார். வராலாறு  திரிபு படுத்தப்பட்டுவிடக் கூடாது எனும் அக்கறையோடு அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு மேலதிக இணைப்பாகச் சேர்த்துள்ளோம்.  அது மேலும் ஒரு சுவையான கதையாகவும், முக்கிய தகவலாகவும் அமைகிறது . -

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்  மணிபல்லவம் எனக் குறிப்பிடப்படும் நயினாதீவில் இருந்த கோவில் தொடர்பிலுள்ள புராதன கதையொன்றில், மணிபல்லவக் கோவிலின் கர்பக்கிரகத்தில் இருந்த சிவன் பார்வதி சிலைகள், அந்நியர் அழிப்பின் போது தாக்கப்பட, ஆலயத்தில் இருந்த பக்தர்கள் அவற்றினை திக்கொன்றாக எடுத்துச் சென்று பாதுகாத்தார்கள். அவ்வாறு பாது காத்த சிவனின் திருவுருவமே புளியந்தீவு நாகேஸ்வரன் கோவிலின் புராதன விக்கிரகம். பிரிந்திருந்த சிவனாரே நீளரவாக நீலக் கடல்தாண்டி, பூவோடு  நாகபூசணியிடம் சென்றார் எனவும் கர்ணபரம்பரை கதைகள் உண்டு.
 
பின்னாட்களில் நாகேஸ்வரனைப் பூஜித்த தாமோதர ஜயர், தவறுதலாக சிவனின் விக்கிரகத்தில் ஏற்பட்ட பின்னம் காரணமாக  மனமுடைந்து தேசாந்தரம் புறப்பட்டார் எனவும், அவ்வாறு சென்றவருக்கு தமிழகத்தில் , சிவாச்சாரியார் ஒருவர் ஆறுதலும், அறிவுரையும், சொல்லி வழங்கிய, விநாயகர், சிவன் திருவுருவங்களுடன் மறுபடியும் அனலைதீவு வந்து அவ்விக்கிரகங்களை முறையே அனலைதீவிலும், புளியந்தீவிலும், பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய வருகிறது. இதன் பிரகாரம்,நயினாதீவு நாகபூசணியம்மன் மூலவிக்கிரகமும், புளியந்தீவு நாகேஸ்வன் விக்கிரகமும் மணிபல்லவக் காலத்திற்குரியவை என்னும் வரலாற்று முக்கியத்துவம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.

இக் கோவிலின் மூல விக்கிரகம் தொடர்பில் சிறிய தந்தையார்  குறிப்பிட்ட கருத்திற்கு இணையான தகவலை, தற்போதைய ஆலயகுரு நாராயணன் குருக்களும் தொடர்பு கொண்டு  தெரிவித்தார்கள். அவர்கள் இருவரது கருத்துக்களின்படி, படக் குறிப்புக்களிலும் மாற்றம் செய்துள்ளோம்.

 இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள். 

No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...