04/10/2018

மத்திய தரைக்கடலின் மகாராணி !

இலக்கியப் பரிச்சயம் உள்ள எல்லோரும் அறிந்திருப்பர் ஷேக்ஸ்பியரின் ' வெனிஸ் நகர வணிகன் ' கதை. பள்ளிக் காலங்களில், அந் நாடகத்தில் வரும் நாயகன் அந்தோனியோவாக நடித்திருக்கிருக்கின்றேன். அப்படித்தான் வெனிஸ் என்னும் பெயர் எனக்கு அறிமுகமாகியது. பின் சரித்திர பாடத்தில் மார்க்கோபோலோவை படிக்கும் போது வெனிஸின் மீதான பிரமிப்பு ஏற்பட்டது. என்றாவது ஒருநாள் வெனிஸின் தெருக்களில் நடந்து திரிய வேண்டுமெனும் எண்ணங்கள் ஏதும் இருந்ததில்லை அப்போது.
 - படங்களின் மேலே அழுத்தினால் பெரிதாகக் காணலாம் -
ஐரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர், மிதக்கும் நகரம்  வெனிஸ் காண்பதில் ஆர்வம் பிறந்தது. காரணம் அதன் கலைத்துவம் தெரிந்து கொண்டதனால். உலகில் சிறந்த கன்னாடிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், என்பவற்றை உருவாக்கும் ஒரு கலைநிலமாகவே காட்சி தருகிறது வெனிஸ்.  இது எவ்வாறு..? வெனிஸின் தோற்றம்  தெரிந்தால் புரியும் அந்த இரகசியம்.
5000 - 7000 ம் நூற்றாண்டு காலப்பகுதியில், மூர்க்கத்தனமான கொள்ளையர் சமூகத்திடமிருந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓடிய ஒரு சமூக மக்கள், பாதுகாப்பான தங்கள் வாழ்விடமாகத்  தெரிவு செய்த இடம்தான் இன்றைய வெனிஸ். அட்ரியாட்டிக் கடலின் வட மேற்கு முனையின், வெனித்தேரியன் குடாவில், கடலில் கலக்கும் கழிமுகத்தில், நதிகள் கொண்டு வந்த சேற்றுமண்ணிலான சதுப்பு நிலத் திட்டுக்களாக அமைந்த 118 தீவுக் கூட்டகளாலும், அவற்றினிடையே ஓடும் 150 அளவிலான நீரோட்டங்களாலும் ஆனதுதான் வெனிஸ்.
உயிரச்சத்தில் ஒடி வந்த மக்களுக்கு, பாதுகாப்பான மண்ணாக  இருந்தபோதும், வாழ் நிலத்திற்கான தன்மையினை அந்நிலம் கொண்டிருக்கவில்லை. சாவதற்கல்ல; வாழ்க்கை வாழ்வதற்கே என்றுணர்ந்த மக்கள், வாழ்விற்கான ஆதாரங்களையும், வாழ்விடங்களையும், பெரும் முனைப்பில் அமைத்தெடுத்தார்கள். அது ஒரு சிலநாட்களில்  முடிந்ததல்ல, நூற்றாண்டுகள் தொடர்ந்த பெரும் உழைப்பு.

இயற்கையின் நீரோட்டங்களில் பயணம் செய்து, ஈட்டிய பொருட்களில் வாழ்வமைத்தார்கள். சதுப்பு நிலங்களில் மரங்களாலான தூண்களை  ஆழப்புதைத்து, தரையின் வலிமையான பாகம் வரையில் அவற்றை உள் நிறுத்தி, அவற்றின் மேலே, வதிவிடங்களைக் கட்டினார்கள். ஆழப் பெருங்கடல் தாண்டிப் பயணிக்கப் படகுகள் கட்டினார்கள். கட்டிய படகுகளில் சென்று வாணிபம் செய்தார்கள். செல்வம் குவிந்தது, சிறப்பும் சேர்ந்தது. அறிவையும் பொருளையும் முக்கியத்துவம் உணர்ந்து பயன்படுத்தினார்கள்.
கிரிஸ்டோ போரோ சபாடினோ எனும் நீர் வல்லுனரின் ஆலோசனையில், நீரோட்டங்களையும், வடிகால்களையும் ஒழுங்குபடுத்தினர். ஓவியத்திலும், கட்டிடக் கலையும் சிறந்த பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற  கலைஞர்களின் அறிவுறுத்தலில், குறுகலானன தெருக்கள், பயணக் கால்வாய்கள், அவற்றின் மேலே பாசாரிகளுக்கான பாலங்கள், குடியிருப்புக்கள், கோபுரங்கள், மாட மாளிகைகள், கலங்கரை விளக்குக் கோபுரங்கள், என அத்தனையையும் பார்த்து, ரசித்துக் கட்டினார்கள். அழகிய வெனிஸ் நகரம் அற்புதமாக உருவாகியது.
வர்த்தக மையமாக, பொருளாதார பூமியாக, வெனிஸ் நகரம் பொலிவுபெற, கலைஞர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் கனவுதேசமானது வெனிஸ். 'மத்திய தரைக் கடலின் மகாராணி' என, அழகுறு கலைகளால் மகுடம் சூட்டி மகிழ்ந்து கொண்டாடினார்கள். அன்று தொடங்கிய  கண்ணாடிப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்குமான பாரம்பரியம், இன்றுவரை உலகப் பிரசித்தம். ஆடலும், பாடலும், அழகுறு கலைகளும் நிறைந்த மண் என்பதால், காதலர் தேசமெனக் கொண்டாடுபவர்களும் உண்டு.
வெனிசின் முரானோ ( Murano) தீவு, உயர்தர கண்ணாடிக் கலைப்பொருட்களின் பிறப்பிடம். தமக்கே உரித்தான தனித்துவமான பராம்பரியத்துடன் கண்ணாடியில் பல்வேறுவிதமான கலைப் பொருட்களைப் படைத்து வருகிறார்கள். நாம் பாரத்துக் கொண்டிருக்கையிலேயே,  கொதிகலனின் உருகியிருக்கும், கண்ணாடிக்கூழை, நீண்ட குழாய்களில்  தோய்த்து, இலாவகமாகச் சுற்றிச் சுழற்றி, குவளைகளாகவும், மலர்சாடிகளாகவும், மனம் விரும்பும் பிராணிகளின் வடிவங்களாகவும், மாற்றி மாயா ஜாலம் காட்டுகிறார்கள்.
சற்றே தொலைவில் தனித்திருக்கும் புரானோ (Burano)தீவு, நூல் வலைப்பின்னல் வேலைகளுக்குப் பிரசித்தம்.  அங்குள்ள வீடுகளின் வண்ணமயம் அதற்கும் மேலான உலகப் பிரசித்தம். கடும் வர்ணங்களில் காட்சி தரும் அவ்வீடுகளின், கதவுகள், சாளரங்கள், திரைச் சீலைகள், பூந்தொட்டிகள் என எல்லாவற்றினையும், வண்ணக் கலை நயத்தோடு பராமரிக்கின்றார்கள். அந்த அழகியலைக் காண்பதற்காகவே உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிக்கின்றார்கள்.
அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவ்வாறு வர்ணம் பூசத் தொடங்கியதன் பின்னால் ஒரு துயர் உள்ளது. பனிக்காலங்களிலும், கடல் சீற்றங்களின் போதும், தனித்திருக்கும் இத் தீவினை, பனிப்புகாரும், மேகக் கூட்டங்களும் பகலில் கூடத் தெரியாதவாறு மூடிவிடுமாம். அவ்வாறு மறைந்து போகையில், அடையாளங் கண்டு பயணிப்பதற்காகவே பளிச்சிடும் வர்ணங்களைப் பூசினார்கள். ஆனால் அதுவே அவர்களது பண்பாடும் பாரம்பரியமுமாகி, இன்று தனித்துவச் சிறப்பு அடையாளமுமாகி நிற்கின்றது.
வெனிசின் மற்றுமொரு சிறப்பு, கலாபூர்வமான முகமூடிகளும், களியாட்ட விழாக்களும்.  முன்னொரு காலத்தில் மாதக்கணக்கில் நடைபெற்ற, இக் களியாட்ட விழாக்களின் கால அளவு, இப்போது குறித்த சில தினங்களில், குறைந்த சில மணித்தியாலங்கள் மட்டுமேயெனச் சுருங்கி விட்டது. செல்வந்தர்கள் உலா வந்த தெருக்களில், சாமானியர்களுக்கும் சமநிலைக் கௌரவத்தினைக் கொடுக்கும் வகையில் அமைந்தது இந்த முகமூடிக் கலாச்சாரம். அதே வேளை தொற்று நோய்களின் தடுப்பாக அமைந்த முகமூடிகளை, அலங்காரமாகப் படைத்தார்கள் எனவும் சொல்கின்றார்கள். காரணம் எதுவாயினும் இன்று வரை தனக்கான தனித்துவப் பாணியில் மிளிர்கின்றன வெனிஸ் முகமூடிகள்.
வெனிஸின் தெருக்களில் மோட்டார் வண்டிகளைக் காண முடியாது. தீவுகளுக்கிடையில் வீதிகள் போன்ற நீரோட்டங்களில், இயந்திர விசைப்படகுகள் இப்போது பயனிக்கின்றன. ஆனால் முன்னைய காலத்தில் ' கொண்டோலா ' எனும் தடி ஊன்றிப் பயணிக்கும் சிறு படகுகளிலேயே பயணங்கள் நடந்திருக்கின்றன. இயந்திரப் படகுகள் வந்துவிட்ட போதும், பளிச்சிடும் கறுப்பு வண்ணத்தில், நீள்வடிவில் அமைந்த கொண்டோலாப் படகுகளில் மக்கள் பயணிக்கின்றனர்.
' கொண்டோலா' படகுகளில் பயணிக்கும் காதலர்களின் காதல் வாழும், கால்வாய்களின் மேலான பாலங்களில், பூட்டுக்களைப் பூட்டிய பின், கால்வாயில் சாவிகளைப் போடுவதால் காதல் ஜெயிக்கும் எனும் நம்பிக்கைளும் இன்றுவரை நிலைத்திருப்பதை நேரில் காணலாம்.
 
வெனிஸின் வணிகக் குடும்பமொன்றில்  பிறந்த மார்க்கோ போலோ, கிழக்காசிய நாடுகளில் மேற் கொண்ட பயணங்களின் போது கண்டுகொண்ட அனுபவங்களை, பின்னொரு காலத்தில் சிறையிலிருக்கையில், நூலாகப் படைத்தார். "மார்க்கோ போலோவின்   பயணக் குறிப்புக்கள்" மிக முக்கிய வரலாற்றுப் பதிவாகவும், சரித்திரம் சொல்லும் சான்றாகவும், ஆவணமாகியது.
 
செங்கல்லும் சாந்தும் கொண்டு உருவான கட்டிடங்கள் காலங்கடந்தும், காரை கிளம்பியும், நின்று நிலைப்பது, வெனிஸின் கட்டடிக் கலையின் சிறந்த தொழில் நுட்பம். டோஜஸ் அரண்மனையும், அதன் சூழலும், ஐரோப்பிய நாகரீகத்திலிருந்து மாறுபட்ட கட்டிடக் கலை வடிவங்கள். இன்னும் சொல்வதனால் வெனிஸ் நகரத்துக்கேயான தனித்துவப் பாணி அதுவெனவும் சொல்லலாம். சொர்க்கத்திற்கு இனையான மகிழ்வைக் கொடுத்த அந்தப் பூமியில் நரகமும் இருந்தது.
டோஜஸ் அரண்மனைக்கு அன்மையில் அமைந்துள்ள பாதாள அறையுட்பட பல அடுக்குகள் கொண்ட சிறைக்கூடம், மிகக் கொடூரமானது எனக் குறிப்பிடுகின்றார்கள்.   Menocchio திரைப்படத்தில், வெனிஸின் பாதாளச் சிறைதொடர்பான காட்சிகளில், அச்சிறையின் கடுமை கண்டிருக்கின்றேன். அச்சிறைகளின் பாதாள அறைகளில் அடைக்கப்படும் கைதிகள், உயிர் மீள்வது அபூர்வம். ஆயுட்கைதிகளும்,  மரணதண்டனைக் கைதிகளும்,  அரண்மனையின் நீதிமன்றிலிருந்து,  சிறைக்கூடத்திற்குச் செல்லும் வழியில் மூடிய பாலம் ஒன்றினூடாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் செல்கையில் வெளியில் நின்று உறவினர்களும், பாலத்தின் சிற்றிடுக்குகள் வழியாக கைதிகளும் பார்த்துப் பெருமூச்சு விட்டுப் பிரிவார்கள். அவ்வாறான கைதிகள் வெளியுலகைக் காணும் இறுதிக் கணங்கள் அதுவாக இருக்கும். அதனால் அப்பாலம் பெருமூச்சுப் பாலமென (Ponte dei sospiri) என அழைக்கப்படலாயிற்று என்கிறார்கள்.
- Ponte dei sospiri தொடர்பிலான இவ்விரு படங்களும் இணையத்தில் பெறப்பட்டவை -

வளமும் வாழ்வும் உள்ள இடத்திற்கு போரும் துயரமும் துரத்தி வரும் என்பதற்கு வெனிஸ் மட்டும் விதிவிலக்கல்ல. பன்னாட்டு வல்லரசுகளின் படையெடுப்புக்குள் சிக்கித் திணறியதுதான் அதன் வரலாறு. 16ம் நூற்றாண்டின் பின்னதாக வணிக மையங்களாக, உலகில் புதிய நகரங்கள் முக்கியத்துவம் பெற, செல்வத்தின் சேர்க்கை குறைந்து போன நகரானது வெனிஸ். ஆனாலும் அபாரமான கலைத்திறனால், அதன் ஜீவன் இன்றளவும், சற்றும் குறையாமல் மிளிர்கிறது. இயற்கைப் பேரிடர்களாலும், சூழல் மாற்றங்களினாலும், வருடந்தோறும் மெல்ல மெல்ல நீரில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது எனும், ஆய்வாளர்களின்  அபாய அறிவிப்புடனே வாழ்கிறது வெனிஸ்.
நீரோட்ட வீதிகளில், படகுகளில் பயணித்து, குறுகலான தெருக்களில் நடந்து, மேம்பாலங்களில் ஏறிக் கடந்து, தண்ணீர் சூழலில் தலை நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்துக் களைத்துப் போய், ஏதாயினும் ஒரு மரத்தடியில் இருந்தால், எங்கோ ஒரு மெல்லிய சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும். ஆளரவம் நிறைந்த சூழலாயினும், அந்த இசையும், கண்களில் தென்படும் காட்சியழகும் தரும் அமைதியில், ஏகாந்தம் காணலாம். அதனால்தான் போலும்,  இன்றளவும் கலாரசிகர்களும், கலைஞர்களும், ஏன் பறவைகளும் கூட,  வெனிஸ் நகர் நோக்கி விரும்பி வருகின்றனர்.
எத்தனை துன்பங்கள் கடந்த வாழ்வாயினும் இன்றளவும் அந்த மக்கள் இயல்பாகவும், அமைதியாகவும், அழகியல் ஆர்வத்துடனும் இருக்கின்றார்கள்.  ஏதோ ஒரு கலைவடிவத்தை அழகியலாகச் செய்யும் விருப்பம் கொண்டவர்களாக, தெரிந்தவர்களாக  இருப்பதுதான் அவர்களின் வாழ்வியல் இரகசியம் என்பது  எனது எண்ணம். அதுவே  அவர்களுக்கும், அங்கு செல்வோர்க்கும்,  வெனிஸ் கற்றுத் தரும் தாரக மந்திரமாகவும் இருக்கலாம்.

சேற்று நிலத்தை, செல்வமும், அழகும் கொளிக்கும் அற்புதபூமியாக மாற்றிய மாமனிதர்களின் வாரிசுகள் தாம் என்பதை, தொடரும் தங்கள் பாராம்பரியங்களுடன் அடையாளப்படுத்தி நிற்கும் அற்புத மனிதர்களாக அவர்கள் வாழும் வரை, தண்ணீரின் மீது கம்பீரம் குறையாத கலைநகராக, "மத்திய தரைக் கடலின் மகாராணி" யாகக் காட்சி தரும் வெனிஸ்.


 

No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...