20/03/2019

தலைமுறைகள் கதை


எனக்குப் பிடித்தமான மொழிகளில் ஒன்று சினிமா மொழி. காட்சி மொழியான இதன் மூலம் கதை சொல்லல் என்பது தனிப்பெரும் கலை.  இந்தக் கதையாடல் மூலம் வரலாற்றைச் சொல்லுதல், பதிவு செய்தல் என்பது,  தகவல் தொழில்நுட்ப காலமாக வர்ணிக்கப்படும் சமகாலத்தில் முக்கியமானது. ஆனால் அவ்வாறான காட்சி ஆவணப்படுத்தல் தமிழில் அருத்தலாகவே உள்ளது. அவ்வாறான முயற்சிகளுக்கு அனுசரணையும் மிகக் குறைவாகவே உள்ளது.


வெகுஜனச் சினிமாவினை விட, ஆவணச் சினிமா மீது எமக்கு அலாதியான பிரியம். அவ்வாறான சினிமாக்களைக் காணும் போதெல்லாம் கற்றலின் தளம் விசாலமாகும். தருணம் வாய்க்கும் போதெல்லாம் அவ்வாறான சினிமாக்களைக் காண்பதிலும், தமிழில் அவ்வாறான  முயற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அடுத்துவரும் பத்தாண்டு காலத்தில் உலகின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுக்க இருக்கிறது அதிகரிக்கும் முதியோர் விகிதம் என்கிறது ஆய்வுகள். முதியவர்களைப் பராமரிப்பது, மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பது, உடல் உள ஆரோக்கியங்களைப் பேணுவது, என்பவை தொடர்பில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என அகிலமெங்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுவிற்சர்லாந்தில் இயங்கும் முதியவர்களுக்கான முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று Connaissance 3. இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம், 60/65 வயதுகளின் பின் ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் தொடர்ந்து தாம் விரும்பும் விடயம் ஒன்றில் அறிவை விருத்தி செய்வதற்கு விரும்புகிறது. அது உல்லாசமாக குழுவாக சென்று ஒரு புதிய ஊரை அதன் இயற்கையை அறிந்தி கொள்வதாகவோ, புதிதாக ஒரு துறையை பற்றி தெரிந்து கொள்வதாகவோ, ஒரு கலையை படிப்பதாகவோ இருந்தால், அவர்களுக்கு அப்பல்கலைக்கழகம் உதவி செய்கிறது.

2018 ஆண்டு, இப்பல்கலைக் கழகத்தின் 20 வது வருட கொண்டாட்டத்தினை,  சுவிற்சர்லாந்தின் லுசான் மாநிலத்தில் உள்ள, ECAL எனும் நுன்கலைக் கல்லூரியுடன் இணைந்து நிகழ்த்த விரும்பியது. சினிமாவில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும் இளைஞர்களைக் கொண்டு 11 வித்தியாசமான குறுந்திரைப்படங்களை உருவாக்கி, குறித்த நாள் ஒன்றில் திரையிடுவது அதன் திட்டமாக இருந்தது.  இக்குறுந்திரைப்படங்கள், வயோதிபர்கள் பற்றிய இளைஞர்களின் மாற்றுப்பார்வை, வயோதிபர்களின் விருப்புக்கள், ஆற்றுகைகள் என்பவற்றை  மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அத்திட்டத்தின் கருதுகோளாக இருந்தது.

இக் கல்லூரி மாணவனான கீர்த்திகன் சிவகுமார் " தலைமுறைகள் " எனும் குறுந்திரைப்படப் பிரதியொன்றுடன் என்னிடம் வந்தார்.  புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களில் பலரும் தமது முதுமையின்போது தாயகத்தில் வாழ்வதற்குப் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். சமய வழிபாட்டுப் பாரம்பரியத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு, வயோதிபத்தில் தினசரி வழிபாடு சிறந்த மன ஆற்றுகையாக இருக்குமென்பதால், அது தினமும் கிடைக்கும் தமது சொந்த மண்ணைநோக்கி விரும்பிச் செல்வார்கள் எனும் கதை மூலம் கொண்டதாக இருந்தது. அக் கதையினை எங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்த முடியுமா? எந்த நாட்களில் அவ்வாறு செய்வது பொருத்தமாக இருக்கும் ? என்ற கேள்விகளையும் முன் வைத்தார்.


ஆலய நிர்வாகத்தினர் மனமுவந்து அனுமதி தந்தார்கள். மேற்குலகில் முதியவர்களுக்கு வழங்கப்படும், வண்ணங்கள், மலர்கள், மனதுக்கு உகந்த இசை, தாளலயம், என்பன  உள்ளடங்கிய  Snoezelen Room therapy எனும் பயிற்சிச் சிகிச்சை முறையினை ஒத்ததாக இருப்பது எமது கோவில்களும், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளுமாகும்.

எங்கள் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில்,  காட்சியும், கானமுமான காலமாக ஐயப்ப மண்டல பூர்த்திநாள் அமையும். அந்த ஆண்டில் (2017) வந்த {யப்ப மண்டல விரதபூர்த்தி நாளில்,  வழிபாட்டின் சூழலுக்கு இடையூறு இல்லாதவகையில் காட்சிப்படுத்த அறிவுறுத்தினேன். திட்டமிட்டவகையில் எல்லாம் நடந்தபோதும், கதை முக்கிய பாத்திரங்களான தாத்தா, பாட்டி, அன்றைய தினத்தில் வரமுடியாது போனது. சரி அவர்களின் காட்சிகளைப் பின்னர் படமாக்கலாம் என்று படப்பிடிப்பினை நடத்தினார்கள். ஆனால் அடுத்து வந்த காலப்பகுதியில் தாத்தா பாட்டி வருவது  சாத்தியமற்றுப் போனது.

எல்லா முயற்சியும் வீணாகப் போய்விடும் என்ற வருத்தமுடன் கீர்த்திகன் மீண்டும் தொடர்புகொண்டார். இந்த முயற்சி தொடர்வதற்கு உதவ வேண்டும் என்றார்.  " எடுக்கப்பட்ட காட்சிகளுள்  நீங்களும் அத்தையும், நிறைய இடங்களில் தென்படுகின்றீர்கள். ஆகவே  தாத்தா, பாட்டியாக, நீங்களும் அத்தையும், நடித்துத் தந்தால் இதனை முடிக்கலாம்... வேறு வழி தெரியவில்லை. எனது குழுவினரும் இதனையே  சொல்கின்றனர்" என்றார்.

அவரது படிப்பிற்கான தரவு, பலரது கூட்டுழைப்பு, இளையவர்களின் எதிர்பார்ப்பு,  என்பவற்றுகும் அப்பால், எங்கள் மொழி சார்ந்த முயற்சி ஒன்று முற்றுப் பெறாது போவது பெருந்துயர். இதைவிடவும் இன்னுமொரு விடயம் இதில் முக்கியமாக இருந்தது. இந்த மூலக்கதையோடு பின்னிப்பிணைந்து வருவது எங்கள்  ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய வரலாறு. அது காட்சி ஆவணமாவது தடைப்பட்டு விடுமே என்ற கவலையும் எமக்கிருந்தது. நாம் முயற்சிக்கலாம்  என எண்ணிய போது,  பெருந்தடையாக இருந்த தூரத்தினை ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினர்  நீக்கியுதவினர். இப் படத்தில் அருமையாக நடித்த மூன்று பிள்ளைகளின் மத்தியில், தாத்தா, பாட்டியாக நாமும் கதையமர்ந்தோம். " தலைமுறைகள் " உருவானது.

2018 ஏப்பிரல் 26ல், Casino mont benon, Allée Ernest-Ansermet 3, 1003 Lausanne
 ல் அமைந்துள்ள Salle Padewrewski திரையரங்கத்தில், நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், இத்திட்டத்தில் உருவாகிய ஏனைய பத்துப் படங்களுடன் " தலைமுறைகள் " படமும் திரையேறியது.

அன்று காட்சிப்படுத்தப்பட்ட படங்களில், சினிமா மொழிசார்ந்து என் விருப்பதுக்குரிய தெரிவாக வேறு படங்கள் இருந்தபோதும், பிரியத்துக்குரியதாக " தலைமுறைகள் " இருந்தது.  ஏனென்றால் அது எங்களின் கதை.  அதற்குள் இணைந்து வருவது எங்கள் ஆலயத்தின் கதையும் கூட. சுவிற்சர்லாந்தின் கலைக்கல்லூரி ஒன்றின் ஆவணக் காப்பகத்தில், காட்சி ஆவனமாக எங்கள் கதை பதிவாகியிருப்பது வரலாற்றுச் சாசனம். காலங்கள் பல கடந்தும், அங்கு  கல்வி  பயிலும் மாணவர் ஒருவர், இக் காட்சி ஆவணத்தைப் பார்க்கையில்; அது எம் கதை சொல்லும்.

Les Générations எனப் பிரெஞ்சு மொழியிலான தலைப்பில் " தலைமுறைகள் " படத்தினை இங்கு காணலாம்.

இத் திரையிடலில் என்னை மிகவும் கவர்ந்த இரு வேறு படங்கள் குறித்து இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.....

02/03/2019

கதிமோட்சம் தரும் காசியும், பற்றறுக்கும் படித்துறையும் !



காசி யாத்திரை ! வைதீக சம்பிரதாயத் திருமண வைபவத்தில் ஒரு கலகலப்பான சடங்கு. பிரம்மசரியத்திலிருந்து  துறவு பூனச் செல்லும் வரனை (மாப்பிளையை) லௌகீக வாழ்வியலுக்கு கிருகஸ்த்த தர்மத்திற்கு, அழைத்துவரும் அருமையான நிகழ்வு. பூவுலகின் இயற்பியலுக்கும், இயங்கியலுக்கும், அத்துனை அவசியமானது கிருகஸ்தம் எனும் இல்லறம். பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும், ஏனைய மூன்றுவகை வாழ்நிலைப்படிகளுக்கும், ஆதார சுருதியாக, அனுசரணையாக, அமைவது இல்லற தர்மம். 

இல்லற பந்தத்தில் இணைந்து, லௌகீக வாழ்வியற் சாகாரத்தில் நீந்துபவர்கள், அதிலிருந்து மீண்டு வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனப் பயணிப்பது குறைவு. அந்தப் பயணப்பிற்கான அனுபவத்தினை, ஆர்வத்தினைத் தருவது கிரகஸ்தத்தின் போதான காசியாத்திரை.

 கணவனும் மனைவியும் கங்கையில் நீராடி, முன்னோர்க்கான தர்ப்பணம் செய்வது முக்கியமானது. சென்ற ஆண்டில் அது நமக்கு திருவருளாக வாய்த்தது. காசியின் அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்த போதும் கனியவில்லை.

பாட்டுப் புலவன் பாரதியை, ஞானச்சித்தனாக மாற்றியது காசி எனப் படித்திருக்கின்றேன். அது சாத்தியமே என்பதை காசியின் தெருக்களிலும், கங்கையின் படித்துறைகளிலும், நடந்த பொழுதுகளில் நன்றாகவே உணர்ந்தேன்.

காட் என்றழைக்கப்படும் படித்துறைகள் கங்கை கரைதனில் விரிந்து கிடக்கிறது. 60க்கும் அதிகமான இந்த காட்களில், ஹரிச்சந்திராகாட்,  மகாநிர்வானி காட், என்பவற்றில் எப்போதும் உடலங்கள் எரிந்த வண்ணமேயிருக்கின்றன. சாதாரண இடமாக இருந்தால் அது மயானத்தில் பிணங்கள் எரிவதாகத்தான் சொல்வார்கள்.  ஆனால் காசியின் துறைகளில் எரிபவற்றை மகா நிவேதனம் எனச் சொல்லிக் கரங் கூப்பித் தொழுகின்றார்கள்.

லௌகீகத்தின் எல்லா ஆர்ப்பாட்டங்களும் அடங்கி ஈற்றில் நீறாகிப் போகும் நிதர்சனத்தை, ஏதோ ஒரு பொழுதில் மட்டும் உணர்த்துகின்ற தலமல்ல காசி.  இதுதான் உண்மை என்பதை எல்லா நொடிகளிலும் உணர்த்துவதாகவே இரண்டாயிரம் ஆண்டுகளாக  அந்த அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. முற்றாக எரிந்து நீறாவதற்கு முன்னதாகவே கங்கையில் உடலங்களை தள்ளிவிடுவார்கள் என்பதும், கங்கையில் மிதந்துவரும் உடலங்கள் நம்மைக் கடந்து செல்லும் எனவும் கதைகள் கேட்டதுண்டு. இன்று அவை வெறும் கதைகளாகப் போகும் வண்ணம், "கங்கா சேவ்" திட்டத்தின் மூலம், கங்கைக் கரை ஒரளவு தூய்மையாகவே இருக்கிறது. ஆனால் அகத் தூய்மை மாந்தருக்கு இப் புறத் தூய்மையெல்லாம் பொருட்டல்ல  எனும் உண்மையினையும், கங்கையின் துறைகளில் படிக்கலாம். அதனால்தான் அவை படித்துறைகளோ ?



காசி;  புராதன நகரம். அதன் கட்டுமானமும், நகர அமைப்பும் வித்தியாசமானது. நெடிதுயர்ந்த நெருக்கமான கட்டிடங்களும், குறுகலான வீதிகளும் கருகற்கள் பதித்த தரைவீதிகளும், ஐரோப்பாவின் புராதன நகர்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. அந்தக் குறுகலான சந்துக்களில் பயணிக்கையில், நாம் எதிர்பாரா வேளையில், எங்கோ இருந்து வெளிப்பட்டு உரசிச் செல்லும் பசுக்களும், எல்லாத் தெருக்களிலும் நிறைந்திருக்கும் நாய்களும், காசிக்கான தனித்துவங்கள். காசியில் நாய்களைக் கால பைரவரின் அம்சமாகவே பார்கின்றார்கள். அதனாலோ என்னவோ அவை யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறுகின்றார்கள்.



காசி விஸ்வநாதர் மட்டுமல்ல, யாம் கண்ணுற்ற எல்லாக் கடவுளர் சிலைகளும் அருஉருவத் திருமேனிகளாகவே தென்பட்டன. விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் எத்துனை பெருமையுளதோ, அதேயளவு அன்பு கொண்டு துதிக்கிறார்கள் அன்னபூரணியை, காலபைரவரை.
காசியில் உடல்கள் எரியும் துறைகளில் கூட ஒருபோதும் பிணவாடை வீசுவதில்லை. ஏன் மல்லிகையும் கூட அங்கே மணப்பதில்லை. கங்கைக் கரையமர்ந்து, வீசும் தென்றலை நுகர்ந்தால், வேதத்தின் சாரம் உறைந்திருப்பதை உணரக் கூடலாம்.



கை மத்துக்கொண்டு கடைந்தெடுத்த கட்டித் தயிர்களின் மேலே, பால்கோவா, பாதாம் பருப்பு முதல் பலவகையான பழங்கள் பதார்தங்கள் தூவி, சிறு மண்சட்டிகளில் தருகின்றார்கள். காசிக்குப் போய் அந்தக் கட்டித் தயிர் சாப்பிடாவிட்டால் பாவியெனப் பழிக்கலாம் எனச் சொல்லும் அளவிற்கு அற்புதமான சுவை. அதன் சுவை அற்புதமெனில், பரிமாறப்படும் அந்தக் குட்டிப் பாத்திரமும், அலங்கரிப்பும் அழகோ அழகு. அதனை ரசிக்கையிலும் , ருசிக்கையிலும், பற்றறுக்கும் பாடம் ஒன்றைப் பரிசளித்தான் இறைவன்.


ஒருமுறை மட்டுமே உபயோகித்துவிட்டு எறிந்து விடும், அந்தக் குட்டிச் சட்டிகளில் சிலவற்றை வாங்கிச் சென்றால், வீட்டில் விருந்தாளிகளுக்கு "ஐஸ்கிரீம்" பரிமாற நன்றாகவிருக்கும் என்ற எண்ணத்தில், அவ்வாறான சட்டிகளை பெற்றுக் கொள்ள முடியுமா என விற்பனையாளரிடம் வினவினோம். அதற்கு அவர்,  நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அறிந்து கொள்ள ஒன்று உண்டு என்றார். " காசி மோட்சம் தரும் பூமி. இங்கிருந்து பற்றோடு மண் எடுத்துச் செல்வது முறையல்ல. அருளலுக்கே உரித்தான கங்கா தீர்த்தம் மட்டுமே கொண்டு செல்வது நல்லது " என்றார். மண்மீதான பற்றறு எனும் மகத்தான பாடமாக இருந்தது.



அப்போதுதான் யோசித்தேன் காசி யாத்திரையின் தொடக்கத்தில், இராமேஸ்வரத்தில் சமுத்திர தீர்த்தமாடிப் பெறும் மண்ணிலே சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தபின் அதனைக் கங்கையில் கரைப்பதும், கங்கையில் நீர்மொண்டு, மறுபடியும் இராமேஸ்வரம் வந்து இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதையும் மரபாகக் கொண்டியிங்குகிறார்கள் நம் மக்கள். உண்மைதான்; பற்றுக்களறுத்து, பதி மோட்சம் தரும் புண்யபூமிதான் காசி !



- இன்னும் சொல்வேன்






தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...