28/06/2019

கால் தூக்கியாடும் நம் கடவுள் ஆதி கோணேஸ்வரர்


சினிமா மீதான என் விருப்பும், அனுபவங்களும் ஆரம்பமானது தம்பலகாமத்தில். ஆனால் அந்த அனுபவம் டென்டுக் கொட்டகையில் தொடங்கியது அல்ல.  அதேபோல் இது சினிமா குறித்த பதிவும் அல்ல.  அன்மையில் புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே பேரையூரில் கண்டெடுகப்பெற்ற ஐம்பொன் சிலைகளின் மத்தியில் காணப்பெற்ற ஒரு விக்கிரகம் தொடர்பில் நண்பர்கள் சிலர் எழுப்பிய வினாக்களின் விடையாக என் அனுபவத்தினைப் பகிரும் பதிவு.


கோணேசர் கோவில் வீதியில் அல்லது பாடாசாலை விளையாட்டு மைதானத்தில், திறந்தவெளி அரங்கக் காட்சியாக, இலங்கை தகவற்துறை அமைச்சகத்தினால், கிராமங்கள் தோறும் சென்று காட்சிப்படுத்தும் செய்திச்சேவையின், ஆவணம் மற்றும் பிரச்சாரப் படங்களே எனக்கு முதலில் அறிமுகமான சினிமா.  ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது அவர்கள் நினைக்கும் போதோ,  ஒரு மாலை இருட்டில், திறந்தவெளியில் படங்காட்டுவார்கள். அது தொடர்பான முன்னறிவிப்பு பாடசாலையில் அறியத் தருவதால், காட்சிப்படுத்தும் வாகனம் வருவதிலிருந்து, திரும்பிச் செல்லும் வரை அருகிருந்து பார்க்கும் ஆர்வம் என்னது. காட்டப்படும் படங்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாகப் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரையில் ஒடும்.

ஒரு தடவை அவ்வாறு படம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்,நாம் தினந்தோறும்  போற்றித் துதிக்கும்,  கோணேஸ்வரப் பெருமானின் திருவுருவம் திரையில் தெரிந்தது. வியப்பும், மகிழ்வும், கலந்த மனநிலையில் விழிகளைத் திரையில் விரித்துக் காத்திருந்தேன். காத்திருப்பு வீணாகவில்லை. மீண்டும் காட்சி தந்தார்  கால்தூக்கி ஆடும்  நம் கடவுள். இம்முறை சற்று விபரமாகவும், கிட்டவாகவும் பார்க்க முடிந்தது. சந்தேகமில்லை அது கோணேஸ்வரப் பெருமான்தான். சிறு வயதிலிருந்தே பாரத்திருக்கின்றேன். அபிஷேக அலங்காரங்கள் செய்திருக்கின்றேன். அந்த விக்கிரகத்தின் அழகை அனுஅனுவாக ரசித்திருக்கின்றேன். ஆனால் அவர் எப்படித் திரையில் தோன்றினார் ? திரும்பப் பார்க்கவோ விபரம் கேட்கவோ முடியாத சிறு வயது.  அந்தப் படத்தின் தலைப்பு " தஞ்சை வளர்த்த கலைச் சிற்பங்கள் " என்பதாக நினைவிருத்திக்கொண்டேன். வீட்டிற்குச் சென்றதும் அப்பாவிடம் வினவினேன். தஞ்சாவூர் சோழர் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. ஆதலால் அங்கும் இதுபோன்ற விக்கிரகம் இருக்கலாம் என்றார். எங்கள் கோணேஸ்வரப் பெருமான் இந்தியாவிலும் இருக்கிறாரா? என நம்ப முடியாக் கேள்வியாக மனதில் புதைந்து போனது.

 1978லோ 79லோ தமிழகத்தின் புகழ்மிகு சிற்பி பத்மபூஷன் கணபதி ஸ்தபதி அவர்கள், முன்னர் அவரது தந்தையார் வைத்தியநாத ஸ்தபதி  கட்டிய ஆதிகோணேஸ்வர் கோவில் ராஜகோபுரத்தைக் காண்பதற்காக தம்பலகாமத்திற்கு வருகை தந்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோவில், ராஜ கோபுரங்கள் வைத்தியநாத ஸ்தபதியால் நிர்மானிக்கப்பெற்றவை. அமைப்பிலும், வடிவத்திலும், இந்த இரு  கோபுரங்களும் ஒரே தோற்றந்தருபவை. அதே போன்று  இவ்விரு கோவில்களும் சோழப் பேரரசுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்டவை என்பதும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய குஞ்சர மல்லன் ராஜ ராஜப் பெருந் தச்சனின் வம்சாவளித் தோன்றல் வைத்திய நாத ஸ்தபதி என்பதும்  குறிப்பிடத்தக்கவை.

தந்தையார் நிர்மானித்த கோபுரத்தைப் பார்த்து மகிழ்ந்த கணபதி ஸ்தபதி அவர்கள்,  கோணேஸ்வரப் பெருமானையும் தரிசித்தார். இது சோழர்கால விக்கிரகம் எனச் சொல்லிக் கொண்டிருக்கையில், அப்பாவின் பின்னால் நின்ற என் மனதுள் அமிழ்ந்து போயிருந்த அந்தச் சந்தேகம் வினாவாக வெளி வந்தது. " இதுபோன்ற விக்கிரகம் தஞ்சாவூரிலும் இருக்கிறதா? " எனக் கேட்டுவிட்டேன். அங்கிருந்தோர்கள் எல்லோரையும் விட வயதிலும், தோற்றத்திலும் சிறியவனான என் கேள்விக்கு அவர் ஆர்வமாகப் பதில் சொன்னார். " ஆம் இருக்கிறது ." எனச் சொன்னவர் மேலும் விபரங்கள் சொன்னார். தான் அறிந்த வகையில் இது போன்ற விக்கிரகங்கள்  மூன்று அல்லது நான்கு இருப்பதாகச் சொன்னார்.  படத்தில் கண்ட காட்சி குறித்துச் சொன்ன போது, தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்த விக்கிரகத்தையே படத்தில் நான் கண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


இது என்ன முகூர்த்தம் என்ற கேள்வியைப் பெரியவர்கள் யாரோ கேட்க,  " நடன பால சம்பந்தர்"  முகூர்த்தம் என்றார். அந்தப் பதில் எல்லோர்க்கும் ஆச்சரியமாகவிருந்தது. ஏனெனில் நடன சிவன் தோற்றம் எனச் சிலரும், காளிங்க நர்தன கண்ணன் தோற்றம் எனச் சிலரும் கருதியிருக்க, அவர் சொன்ன பதில் மாறுதலாக இருந்தது. அது தொடர்பில் அவர் மேலும் விளக்கம் சொல்கையில்,  விக்கிரகத்தின் சிகையலங்காரம், மற்றும் முகபாவம், என்பன சோழர்கால விக்கிரகங்களின் தனித்துவம் எனவும், இரு கரங்களுடன் சிவருபங்கள் அமைவதில்லை என்றும், அதேவேளை இது கிருஸ்ணரூபம் இல்லையென்றும், அதற்கான விளக்கங்கள் பலவும் சொன்னார். அவையணைத்தும் இப்போது என் நினைவில் இல்லை.


நாயன்மார்களிள் ஒருவரது சிற்பத்தைச் சிவருபமாக வழிபடுதல் தகுமா என்றொரு கேள்வியும் அப்போதெழுந்தது. அதற்கும் கணபதி ஸ்தபதி அவர்கள் வித்தியாசமான, ஏற்புடையதான பதிலொன்றைத் தந்தார். சிவனடியார்களான நாயன்மார்கள், சிவனின் திருவிளையாடலுக்கான தோற்றங்களே. ஆதலால் அவர்களை சிவனாக வழிபடுதல் முறையே என்றவர், இந்தக் கோவிலின் நம்பிக்கைத் தெய்வமாக இறையருளால் எழுந்தருளியுள்ள இந்த முகூர்த்தத்தை சிவனாக அன்றி வேறு முகூர்த்தமாக் கருதல் கூடாது என்றும் சொன்னார்.

ஆதிகோணேஸ்வரராக எங்கள் ஆழ்மனதில் பதிந்து அருள்பாலிக்கும் சிவனாகவே  தம்பலகாமத்தில் கோவில் கொண்ட அம் முகூர்த்தத்தை, எக்காலத்திலும் கொண்டாடிப் போற்றுவதே நம் அனைவர்க்கும் சிறப்பு என்பேன்.
பின்னாட்களில் வரலாறுகள் தொடர்பான தேடல்களின் போதும், வாசிப்பின்போதும், இதேபோன்ற விக்கிரகங்கள், ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திலும், வாஷிங்டன் அருங்காட்சியகத்திலும் "பால சம்பந்தராகவே " காட்சிப்படுத்தப்பட்டிருப்தைக் குறிப்புக்களில் அறிந்தேன். இப்போது புதுவையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது, தஞ்சை அருங்காட்சியத்தில் இருந்த சிலையா அல்லது மற்றுமொன்றா என்பது தெரியவில்லை.



இவ்விக்கிரகத் தோற்றத்தினை பால சம்பந்தராக அடையாளப்படுத்திக் காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காடசியங்களின் இணைய இணைப்புக்களைக் கீழே காணலாம்.


சென்னை அருங்காட்சியகம்

வாஸிங்டன் அருங்காட்சியகப் பட இணைப்பு

 ஆசிய அருங்கலைகள் சேமிப்பு

 பிற்குறிப்பு : சோழர்காலச் சிகையலங்காரம் தொடர்பில் கணபதி ஸ்தபதி அவர்கள் சொன்னது போன்ற தனித்துவமான சிகையலங்காரம்,  பின்னர் வெளிவந்த ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில், ராஜ ராஜன், குந்தவை நாச்சியர் ஆகிய கதாபாத்திரங்களின் ஒப்பனைகளில் கவனத்திற் கொள்ளபட்டது எனத் திரைத்துறைசார்ந்த நண்பரொருவர் சொன்னதாகவும் ஞாபகம்.



தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...