27/09/2018

அம்மா ஜெகதாம்பாள் !


கோவிலில் நீண்ட காலம் பூசை செய்யும் ஐயரை நிறுத்தினால், ஐயர் என்ன செய்யலாம்? புதிய கோவில் தொடங்கலாம் என்பதெல்லாம் சமகாலத் தேர்வுநிலை. ஆனால் முன்னைய காலம் அவ்வாறில்லை. பூஜையும் புரோகிதமும் மட்டுமே தெரிந்திருந்த அந்தணர்களுக்கு வேறு கோவில் தேடிச் செல்வதைத் தவிர வாழ்விற்கு மாற்று  வழியில்லை.  அக் குடும்பங்களின் வலி மிகவும் துயரமானது. அந்தத் துயரத்தை " ஆகுதி " எனும் சிறுகதையில் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் அ.சோமகாந்தன் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.  வாழ்வின் துயருக்குள் தன் குடும்பம் சிக்கி விடக்கூடாதே என்பதற்காக, சிரமங்களையெல்லாம் தாங்கிய வண்ணம், கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள் எனும் உண்மையை, " பொற்சிறையில் வாடும் புனிதர்கள் " நாவலில் பதிவு செய்திருக்கின்றார் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் தெனியான். இத்துயர்களை அறிந்த போது என்னுள் எழுந்த  துணிபே " செய்யும் தொழிலே தெய்வம்" எனச் சொல்லி, தெரிந்த வேலை எதையும் செய்யலாமெனும் எண்ணம். அதனாலே பலவற்றையும் ஆர்வமாக கற்கவும் அறியவும் முயன்றேன். அவையெல்லாவற்றுக்குமான அடிப்படை; வாசிப்பு என்பேன். அதை எனக்குச் சிறு வயதிலே அறிமுகப்படுத்தியவள் என் அம்மா ஜெகதாம்பாள் !
அம்மா!
எல்லோர்க்கும் பிடித்தமான, நேசிப்புக்குரிய, ஒரு உறவுமுறை அம்மா. நாம் விரும்பித் தேர்வு செய்யமுடியாத உறவும் கூட. இவ்வுலகினை, உலகின் சிறப்புக்களை, வாழ்வின் பெருமிதங்களை, நாம் காண, களிப்புற வழிசமைத்தவள். பெருமைக்குரிய தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்ததினால், எனக்கும் அந்தப்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்தத் தாயுடன் வாழ்ந்த காலத்தின் நீட்சிதான் சொற்பமானது.

என் பத்தாவது வயதில் காலமாகிய  தாயுடனான வாழ்க்கைக் காலத்தில், முதல் ஐந்து வருடங்கள் பால்யப் பருவத்தில் கழிந்துவிட, இறுதி வருடமும் அவளது நோயின் காரணமாகக் குழப்பமாய் அமைந்து விட, நான்கு வருட காலப்பகுதியே அவளைக் கற்கவும், அவளிடமிருந்து கற்கவும் முடிந்தது. ஆனாலும், அவளிடமிருந்து கற்றுக்கொண்ட பலவும் , அவள் பிரிந்து, பல ஆண்டுகள் ஆனபோதும், இன்றுவரை என்னுடன் வாழ்கின்றது, என்னை வாழ்விக்கின்றது. அதில் முக்கியமானது வாசிப்பு.  எவ்வளவு வேலைப்பளுக்கள் இருந்தாலும் தினமும் ஏதோ ஒரு சிறு பகுதியையாவது வாசித்துவிடுகின்றேன்.

அம்மாவைப்பற்றிய அடையாளங்கள் சின்ன வயதில் என்னுள் பதிந்தபோது, சாதாரணமான சம்பவங்களாகத்தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் இப்போது பார்க்கையில்தான் தெரிகிறது அவளின் மாசிலா மாற்றுக்களின் மகத்துவம். அவளின் மறைவின் போது, நாம் அழுததிலும் பார்க்க, தம்பலகாமம் அழுதது என்று சொல்லலாம். அந்தளவுக்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தாள். அதற்குக் காரணம், அவளின் மகத்தான மனித நேசிப்பு. நல்லவன், கெட்டவன், குடிகாறன், கோள் சொல்பவன், சின்னவன், பெரியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என எந்தப் பாகுபாடுமில்லமால், பேதங்கள் கொள்ளாமல், அனைவரையும் சமமாக மதிக்கத் தெரிந்த மாதரசி.

அன்பு அன்பு அன்பு, அவளுடைய தாரக மந்திரமே அதுதான். அதன் நித்திய ஜெபிப்பால் அவள் பெற்றிருந்த பலம் மிகப்பெரியது. குறுமுனி போன்று உயரத்தில் குறைவான அந்தக் குட்டைப்பெண்மணியின் கேள்விகளுக்குப் பயமும் மரியாதையுமாகப் பதில் சொல்லும் மனிதர்கள் பலர், கடைத்தெருவீதியில் வாய்சொல்வீரர்களாக நிற்பதைப் பாடசாலை செல்லும் வேளைகளில் கண்டு அதிசயித்திருக்கின்றேன். குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பும் குடிமன்னர்கள், எங்கள் வீட்டு வாசலில் அம்மா நிற்பதைக் கண்டதும், மரியாதை மன்னர்களாகச் செல்லும் பவ்வியம் கண்டிருக்கின்றேன். அப்போது யோசித்ததுண்டு, ஏன் இப்படி எல்லோரும் அம்மாவிடம் பயந்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்கள் பார்த்துப் பயங்கொள்ளும் முற்கோபியான என் அப்பா கூட, அம்மாவின் வார்த்ததைகளில் அமைதியாகிவிடுவார். இப்போது புரிகிறது, அது அவள் மேலான பயமில்லை, பணிவு என்று. மற்றவர்களைப் பணிய வைக்க அவள் பாவித்த ஒரே ஆயுதம், எல்லோரையும் மிகுதியாக நேசித்ததுதான். நேசிப்பின் வழி நின்ற அவள், அதே நேசிப்பின் வழியாக எட்டிய பரிமானங்கள் மிக மிக உயரமானவை.

ஊருக்குள் ஒரு துயரம் என்றாலோ, மகிழ்ச்சி என்றாலோ, அம்மாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். யார் யாருக்கு என்ன உதவிகள்தேவை, யார் யாரிடமிருந்து அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதெல்லாம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளால் மட்டுமே முடியும்.

சாதியக்கட்டுமானங்களின் வழிவந்தவளாயினும், சாதியத்தின் வழியில் எவரையும் பார்த்தறியாதவள். அந்த ஜீவநேசிப்பே அவளை அனைவர்பாலும் கவர்ந்திற்று. அதற்காக அவள் பகுத்தறிவுவாதியல்ல. நிறைந்த கடவுள் பக்தியுடையவள்தான். முப்பத்தைந்து வருடங்களின் முன்னமே, பெண்களை அணியாகவும், அமைப்பாகவும், திரட்டி ஆக்கவழியில் வழிநடாத்தினாள். ஆனால் அரசியல்வாதியல்ல. இசையில் வயலினும், இலக்கியத்தில் புத்தகங்களும், வாசிக்கத் தெரிந்தவள். நன்றாகப் பாடவும் செய்வாள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகனாய் மதிக்கப்படும் சேகுவேராவின் தாய் ஸெலியாவுக்கும், என் தாய்க்கும் ஒற்றுமைகள் இருந்தததை, பின்னாட்களில் சேயின் வரலாற்றை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். ஸெலியா போன்று வசதிமிக்க நடுத்தரக்குடும்பத்தின் வாரிசு, பரோபகாரி, பெண்களின் துன்பங்களுக்கான மாற்றுச்சிந்தனைகள், ஆஸ்த்மா நோய்யுள்ள மூத்த மகன், எனச்சில ஒற்றுமைகள் தெரிந்தன. ஆனால் அம்மா சேகுவேராவைப் பற்றியோ, ஸெலியாவைப் பற்றியோ, அறிந்திருந்தாளா என்பது தெரியவில்லை.

சிறு வயதில் ஆஸ்த்மா நோயால் மிகவும் துன்பப்பட்ட என்னை, நோயின் கடுமையிலிருந்து ஆற்றுப்படுத்துவதற்காக சேயின் தாய் ஸெலியா போன்றே, என் தாயும், எனக்குக்கற்றுத்தந்தவைகள் ஏராளம். என் ஏழாவது வயதிலேயே வாசிப்பை யாசிக்கக் கற்றுத்தந்தாள். எட்டாவது வயதில் எழுதும் வகை சொல்லித்தந்தாள். ஒன்பதாவது வயதில் வானொலி கேட்கப்பழக்கினாள். அந்தப்பழக்கத்தில் அறிமுகமான நிகழ்ச்சிதான் வானொலி மாமா நடாத்திய '' சிறுவர் மலர் '' நிகழ்ச்சி. சனியோ, ஞாயிறோ மதியம் பன்னிரெண்டு மணிக்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. அப்போது வானொலி மாமாவாக இருந்தவர், நா.மகேசன். மிக அருமையான குழந்தைகளுக்கான கலைஞர்.

அம்மாவின் வழிகாட்டலில் என் முதலாவது எழுத்து சிறுவர் மலருக்காக எழுதப்பட்டது. அம்புலி மாமா சிறுவர் புத்தகத்தில் வந்த ஒரு கதையைத் தழுவலாகக் கொண்டு, 'எலிப்படை' என்ற வானொலி நாடகம்தான் எனது முதலாவது ஆக்கம். அதை மேலும் மெருபடுத்தி அழகியதொரு வானொலி நாடகமாக வானலைகளில் வானொலி மாமா ஒலிக்கவிட்டிருந்தபோது, எனக்கு வயது பத்து. என்பக்கதிலிருந்து அந்நாடகத்தைக் கேட்டுமகிழ அப்போது என் தாய் உயிரோடில்லை. அதை என் அருகிருந்து இரசித்துக் கேட்டு மகிழ்ந்தவர் என் சிறிய மாமா இராமசாமி சர்மா. என் படைப்புக்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எனைப் பாதித்த என் தாயும், அவள் தந்த வாசிப்பினால் பதிந்த சேயும், என் எண்ணங்களில், செயல்களில், இன்னமும் இணைந்தே வருகின்றார்கள்.

ஒரு குடும்பத்தில்  நிகழும் மங்கல நிகழ்வுகள் திட்டமிட்டு நிகழ்பவை. அதற்கான வளங்கள் அனைத்தும் படிமுறையாகச் சேகரிக்கப்படும். ஆனால் அமங்கலமான  மரணம் எதிர்பாரமல் சம்பவிக்கையில், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போகும். அப்போது அக் குடும்பத்திற்கான உதவி வழங்கல் குறித்து, சென்ற வாரத்தில்,  தம்பியொருவன் சமூகவலைத்தளத்தில், மாற்றி யோசிப்போம் என  ஒரு பதிவிட்டிருந்தான். நியாயமானதும் தேவையானதுமான சிந்தனையது.

இன்றைக்கு 50 வருடங்களின் முன்னரே அந்த மாற்று யோசனையைச்  செயலாக நெறிப்படுந்தியிருந்தார்கள் என் தாயும் அவள் தோழிகளும் என்பது ஆச்சர்யமான உண்மை . அம்மாவின் தலைமையில் ஒரு மாதரணி தம்பலகாமத்தில் இயங்கியது. பிரதோஷ விரதகாலங்களிலும், ஏனைய சிவ விரதங்களின் போதும், கோவிலில் பஜனை செய்வதாக, ஒரு சிவராத்தி நாளில்  ஒன்று சேர்ந்த இந்த அணியினர், சமூகத்திற்காக ஏதேனும் செய்ய எண்ணிய போது உருவானதுதான் அத் திட்டம். ஒரு தொகைப் பணத்தினை சேகரிப்பாக சேமித்துக் கொண்டார்கள்.

ஒரு வீட்டில் துயர் நடந்தால், அவ் வீட்டின் பக்கத்து வீடுவரைக்கும் அம்மா சென்றுவிடுவாள். அங்கிருந்து துயர்வீட்டின் உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசி, ஆகவேண்டிய செலவினங்களுக்கான உதவிகளை, தங்கள் சேகரிப்பிலிருந்து கொடுத்து, ஆறுதல் சொல்லி வருவாள். வீடு திரும்பியதும் நேரே கிணற்றடிக்குச் சென்று தலை முழுகிய பின், துயரவீட்டிற்கான உணவுத் தேவைகளுக்கான சமையல்களைச் செய்து,  உதவி செய்யக் கூடியவர்கள் மூலமாக அவற்றினைக் கொடுத்து அனுப்பவும் செய்வாள். துயரத்திலிருந்து அக் குடும்பம் மீண்டதன் பின்னதாக, செலவுக்குக் கொடுத்த தொகையினை, மாதாந்திரமாகத் திருப்பிச் செலுத்தும் வகையினை ஏற்படுத்துவாள். இதற்கு அவளுக்குப் பெருந்துணையாக இருந்தவர், என் பள்ளித் தோழி கௌசலா தேவி ரகுராமனின் தாயார் பாக்கியம் அக்கா.

இன்று நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது அரை நூற்றாண்டுகளுக்கு முன், அம் மாதரசிகள் எவ்வாறு சிந்தனையோடு செயற்பட்டிருக்கின்றார்கள் என்று. இந்த விடயம் அப்போது வீரகேசரி பத்திரிகையில் செய்தியாகவும் வந்திருந்தது. அதன் வெட்டுப் பிரதியும் என்னிடம் நீண்டகாலமாக இருந்தது.

அம்மாவின் தைரியம் குறித்து அம்மம்மா  ஒரு சம்பவம் சொல்வார்.  அம்மாவின் தந்தையார் இளவயதில் மறைந்துவிட, அம்மாவையும் , அவரது தம்பியும், எமது தாய்மாமானாருமாகிய இரத்தினசபாபதிக்குருக்களையும், ஆதரித்து வளர்த்தவர் அவர்களது பேரனார் சின்னையர். அவர் அனலைதீவில் காலமானபோது, எனது பெற்றோர்கள் அனலைதீவுக்கு வெளியே இருந்திருக்கிறார்கள். மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் வரும்போது, சின்னையரின் பூதவுடல் மையானம் சென்றுவிட்டது. ஆனால் அம்மா அவரின் முகத்தை தான் இறுதியாகப் பார்க்க வேண்டும் என பிடிவாதமாக மயானம் சென்று பார்த்தார் என அம்மம்மா சொல்வார்கள். அந் நாட்களில் பெண்கள் மையானம் செல்வதென்பது இல்லாத மரபு.

" மரபுக்குள் நின்று மரபை மீறல் " யுக்தி  உங்களுக்கு நன்கு தெரிகிறதென, என் செயற்பாடுகளுக்கான விமரிசனமாக,  அன்பிற்கினிய நண்பரும், ஆய்வாளருமான பற்றிமாகரன் கூறுவார். உண்மையில் அந்த வித்தையை அறிந்து கொண்டது என் தாயிடமிருந்துதான்.  புத்தகங்களை வாசி, ஆனால் புத்தகப்பூச்சியாக வாழ்ந்து விடாதேயென அறிவுறுத்தியவள் அம்மா. அறிந்து கொள்ளல், அனுபவங்களை உணர்ந்து செல்லல், என வாழ்க்கையை வாழ்ந்து செல்ல, அகரம் சொல்லித் தந்தவள் அம்மா.


அம்மாவின் இஷ்ட தெய்வம் அனலைதீவு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார். அம்மாவின் இறுதி மூச்சு பிரிகின்ற வேளையிலும், அவர் கூறியது பிள்ளையாரின் திருநாமம்தான். அம்மாவின் அந்தப் பிரார்த்தனையின் பிரார்த்துவம்தான் இன்று என் வாழ்வில் தொடர்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் எனக்கும், அப்பாவிற்கும், எங்கள் குடும்பத்தில் எல்லோர்க்கும் சிவன் பார்வதி மீதான பற்றுதலே அதிகம். அப்பாவின் வாழ்க்கைக் காலத்தில் அதிகம் பூஜை செய்ததும் சிவனுக்குத்தான். ஆனால் இந்தத் துறைக்குள் வரவே கூடாது என திடமான எண்ணம் கொண்டிருந்த என்னை, ஏதோ ஒன்று இழுத்து வந்து, தொடர்ச்சியாக  விநாயக வழிபாடு செய்விக்கிறது. தம்பலகாமத்தின் வில்வமரத்தடிப் பிள்ளையாரில் தொடங்கி, கிண்ணியா ஊற்றங்கரைப் பிள்ளையார், சுவிற்சர்லாந்தில் கூர் நவசக்தி விநாயகர், இத்தாலியில்  ஜெனோவா சித்தி விநாயகர்,  நாப்போலி விநாயகர் எனத் தொடரும் இறைபணியில், அம்மாவின் அருளாசியும், ஆத்ம தர்சனமும் மிகுந்திருப்பதாக நம்புகின்றேன்.

அம்மாவின் மறைவின் போது ஏதுமறியாதவனாக இருந்த எனக்கு இழப்பின் பயம் மட்டுமே இருந்தது. ஆனால் அம்மாவின் இழப்பின் வலி புரிந்து நான் கண்ணீர் விடுகையில் எனக்கு வயது முப்பது. அடுத்த வருடம் எமக்கு மகள் பிறந்தாள்.....


1 comment:

  1. அருமையான பதிவு அண்ணா. எங்களுக்கு அறிமுகமில்லாத பெரியம்மாவை பற்றி அறிய முடிந்தது. -அபிராமி (சதாசிவ ஐயர்)

    ReplyDelete

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...