04/01/2019

மண் பயனுற வேண்டும்..!

2018 விடைபெற்றுக்கொண்டது... எமது 60வது அகவை ஆண்டு அது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நினைவுகளை அசைபோடத் தொடங்கிய ஆண்டு. வாழ்வின் பக்கங்களை நினைவு கொண்டு, பதிவு செய்யத் தொடங்கையில்,  அழுத்தமான துயர்களை, வருடத்தின் இறுதி மாதங்களில் அள்ளித் தந்து முடிந்து போன ஆண்டு.


ஒக்டோபர் இறுதி வாரத்தில், எங்கள்  குடும்பத்தின் இளையவன்,  எல்லோர்க்கும் பிடித்தமான  சாரங்கனின் மறைவு மீளமுடியாத பெருந்துயர். எண்ணங்களில் மறக்க முடியாத மனத்துயர். அதிலிருந்து அகல்வதற்குள்ளாக, சின்னமணிமாமாவின் சத்தியபாமா அத்தையின் இழப்புத் துயர்.  மாமாவின் தனித்துவமான வாழ்வில், பெருந்துணையாக நின்ற மாதரசி. அதிகம் பேசாது அன்பு செய்ய மட்டுமே தெரிந்த பெண்மணி, பிரிவுக்கு முதல்நாளில் பேசி மகிழ்ந்தது இன்னும் செவிப்பறைகளில் எதிரொலிக்கிறது.

நவம்பர் மாதம், நட்பு வட்டத்தில் இத்தாலி புஸ்பரூபனின் துணைவி ஜெயலலிதாவின் மறைவு. குருவாகவிருந்து கல்யாணம் செய்து வைத்த காலம் முதல், கனிவும், கண்ணியமும், தந்து பழகியவர்கள் லலிதாவும், ரூபனும். நோயுற்றிருந்த காலத்திலும், நம்பிக்கையோடு நற்பணிகள் புரிந்தவள். இயலாது போயிருந்த இறுதிக் கணங்களில் பார்க்க விரும்பிய போதும், முடியாது போனது துயரம்.

புலம் பெயர்வாழ்வில் அறிமுகமான சமூக ஆர்வலன், விளையாட்டு வீரன் பாபு டிசம்பரில் இல்லாது போனான். என் வானொலி நிகழ்சிகளின் இரசிகனாக அறிமுகமாகி,  நட்பாகத் தொடர்ந்தவன்.  நல்ல சிந்தனைகளும், நற்பயிற்சிகளும் கொண்டிருந்தவன். தொடர்புகள் குறைந்து போன நிலையிலும் இழப்பின் செய்தி வலிதருமளவிற்கு நல்லவனாக வாழ்ந்து மறைந்தான்.
இவ்விதமாக இழப்பின் துயர்கள் அழுத்திய போதும் இயன்றவரை இயங்கிக் கொண்டேயிருந்தோம். குளிரும், பனியும், பணிகளின் சுமைகளும்,  மனதின் துயர்நிலை வலியும்,  அமைதியுற இருந்து எழுதும் மனநிலையைத் தந்தில்லை. ஆனால் அவ்வாறான அமைதிகொள் யோகநிலை, இல்லாத நிலையும் உவப்பாக இருந்ததில்லை. இவ்வாறாகக் கடந்து போனது 2018ன் இறுதி நாட்கள்....
 
புதிய ஆண்டின் மலர்வு, மாற்றங்களையும், ஏற்றங்களையும், தரவேண்டும் எனும் நம்பிக்கையோடும் விருப்பத்தோடுமே  நாமெல்லோரும் பயணிக்கின்றோம். நாம் விரும்பும் மாற்றங்களால் இந்த மண் பயனுற வேண்டும், மாந்தர் பயனுற வேண்டும்.  மண்ணும்  மாந்தரும் பயனுற வேண்டுமாயின், மாசும் , மன அழுக்காறும் அகலவேண்டும்.

நீர்த்தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்களுக்கு நடுவே   Cleaner fish எனும்  சுத்தப் பணி மீன் ஒன்று ஊர்ந்து செல்லும்.  அழகும், வண்ணமும் குறைவான  அந்த மீன், அமைதியாக ஆற்றுகின்ற பணியில், வண்ண மீன்கள் வளமாகச் சுற்றி வரும். ஒரு   Cleaner fishஐப் போல  வாழ்ந்து கடக்கும் நண்பர்கள் பலரோடினைந்து, மண்ணும், மாந்தரும், பயனுறவேண்டும்  என்னும் பெரு நோக்கங்களோடு,  2019னை ஆரம்பித்திருக்கின்றோம்.

இயற்கையெனும் மகாசக்தியை, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், எனப் பஞ்சபூதங்களாகப் பணிந்து போற்றும் மாண்பு இந்துக்களுக்கானது. இவற்றின் சமநிலை குழம்பும் வேளைகளில் இயற்கைப் பேரிடர்கள் தோன்றி, மக்களைக் காவுகொள்கின்றது. ஆதலால் அவற்றின் சமநிலை பேண சூழலைப் பாதுகாப்பது அவசியமானது.

நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொருட்களின் பாவனை, இந்தப் பூமியின் சூழலைப் பாதகம் செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. நமது சராசரி வாழ்க்கையில் பங்கெடுத்திருக்கும் இப் பொருட்களின் சிதைவுற்று மறுஆக்கம் காணாத தன்மையால், இந்த மண் வளம் குறைகிறது, நீர் வறண்டுபோகிறது, காற்று மாசடைகிறது. இதனைக் கவனத்திற் கொண்டு, இத்தாலி இந்துக்கள் கூட்டமைப்பு, பிறந்திருக்கும், 2019 புதிய ஆண்டினை சுற்றுச் சூழலின் நன்மை பேணும் ஆண்டாக பிரகடனம் செய்து, "Green Temple" திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.

 இத்திட்டத்தின் செயற்பாடாக, இத்தாலியில் உள்ள இந்துக் கோவில்களில் நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொருட்களின் பாவனையைக் குறைத்துக் கொள்ளவும், காலவோட்டத்தில் தவிர்த்துக் கொள்ளவும், விதந்துரைத்துள்ளதுடன், அதற்கான செயற்பணிகளையும் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக ஆலயங்களில் பிரசாதங்கள், நீர் வழங்குவதற்கான காகிதக் கோப்பைகள், மற்றும் தட்டுக்கள், என்பவற்றை, புத்தாண்டுப் பரிசுப் பொதியாக வழங்கியிருக்கிறது.

 

பெற்றுக் கொண்ட இந்து ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டுப் பூஜைகளின் பின்னதான பிரசாதம் வழங்கலில் இருந்து, விரைவில் மக்கிப்போய் மண்வளத்தினைக் காக்கக் கூடிய புதிய பொருட்களின் பாவனையைத் தொடங்கியிருக்கின்றோம்.


கடந்த நான்கு வருடங்களாகப் புதிய ஆண்டின் முதல் வார இறுதியில்,  " வலுவிழந்தோர்க்கான வாழ்வாதாரம் " தேடும் நிகழ்வினை  சுவிற்சர்லாந்தின் கிறபுண்டன், மற்றும் அயல் மாநிலம் வாழ் நண்பர்கள் சிலர் இணைந்து நடாத்தி வருகின்றார்கள். அவர்களோடு அம் முயற்சியில் இணைவதன் மூலம், தாயகத்தில் போரின் கொடுமையாலும், இயற்கையின் அனர்த்தத்தினாலும், வாழ்வாதாரம் தொலைந்து போன மக்களுக்கு உதவ முடிவதில் பெருந்திருப்தி. சென்ற ஆண்டில் வலுவிழந்த 52 குடும்பங்களுக்கு, வாழ்வாதாரம் செய்ய முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

எதிர்வரும் 06.01.2019 ஞாயிறு ஐந்தாவது ஆண்டாக அந்த நிகழ்வில் இணைகின்றோம், மேலும் பல புதிய செயல் யோசனைகளுடன். வாய்ச்சொல் வடிக்காது, செயலுக்காய் நொடிக்காது உழைக்கும் மக்களுடன் உடனிருப்போம் என்ற எம் எண்ணத்தின்வழியே புதிய ஆண்டினைத் தொடங்கியுள்ளோம் மாற்றங்களை நோக்கி........

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...