16/10/2018

கும்பத்துமால் - ஒரு பண்பாட்டுக் கோலம்.

உயிரியல் ஒழுங்கில் பரினாமம் பெற்ற ஒரு விலங்கினம்தான்  மனித இனம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எல்லா ஜீவராசிகளுக்கும் அனைத்துவிதமான உணர்வுகளும் உள்ளபோதும், சிந்தனையும் பேச்சும்,  வாய்திருப்பது நமக்கு மட்டுமே. அதற்கான மனம் உடையவர்களாகையால் நாம் மனிதர்கள். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் எனப் பொருள் கொள்ளலாம்.  நினைக்கும் சிந்தனைக் கருவிதான் மனம்.  

உலக   உயிர்கள் அனைத்தையும்,   ஓரறிவுயிர்   முதலாக,   ஆறறிவுயிர்   வரையிலாக,   தமிழ் இலக்கண நூல்கள்   வகுத்துக்   காட்டியுள்ளன.
“ஒன்றறி வதுவே வுற்றறி வதுவே 
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே ” என்கிறது பழந் தமிழ் நூலான தொல்காப்பியம். 

ஐம்புலன்களின்பாற் செயற்பட்ட விலங்கினம், மனம் எனும் சிந்தனைப் புலனூடாக பரினாமம் பெற்று மனித இனமாக மாற்றங்கண்டுள்ளது.  மனத்தினை அன்பின் வழியாகப் பயனிக்கச் செய்து, தீய எண்ணங்களை மறைத்தல் என்பது, அறிவின் வழி வளர்சியுற்ற இனத்திற்கு அவசியமானதாகிறது. அவ்வாறு உய்ந்துயர்வதே இறை நிலை என்கிறது ஆன்மீகம்.

சேற்றில் புரளும் எருமையினம் போல், அழுக்காற்றில் கிடந்துழலும் மனத்தினை, கலைகளால் தூய்மைப்படுத்தி, அழகுடையதாக அலங்கரித்து,  செழுமைப்படுத்தும் செயல்வினைதான் மஹிஷாசுர சங்காரத்தை உச்சமாகவும், விஜயதசமியை, வெற்றித் திருநாளாகவும், கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் உட்பொருள் என்பது  நாம் கொள்ளும் விளக்கம்.

தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, இலங்கையின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசை, அல்லது சரஸ்வதிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, கிழக்கின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும். அவைதான் "கும்பத்துமால்கள் ".

ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ கிழக்கில் அதிகளவு இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும்.

நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது கிழக்கின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியை இன்றளவும் கொண்டாடி வருகின்றன.
நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிப் பேசுவார்கள். கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல்மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.
நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள். அவ்வாறு ஆடுகின்றவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.

கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக் கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய பொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.

உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப் பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் சைகையால் சொல்வார்கள்.  அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால்  முகத்தில் மகிழ்ச்சி தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.

தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள்.
 - வீரபத்திரராக கலையாடி -
"கந்தன் கருணை" படத்தில் வீரவாகு தேவராக சிவாஜி கணேசன் மிடுக்கான நடையொன்று நடப்பாரே, அதுபோன்ற மிடுக்கும், பெண்மையும் கலந்த, கலவையான அந்த ஆட்டத்தில், சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம்.  அது மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல 'கணீர்' எனும் வெண்கலக்குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து, அவரது  உடுக்கும் பாடுவது போல் இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு, பாடச் சொல்லிச் சைகை காட்டுவார். காத்தமுத்தண்ணரின் மாரியம்மன் தாலாட்டில்,  காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் அலாதியான  அழகோடிருக்கும்.
 - மாரியம்மன் கலையாடி -
இந்தக் கலை ஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகப் போட்டியொன்றும் நடக்கும். மாந்ததரீகம் அறிந்தவர்கள் கலை ஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆடி, மயங்குவார்கள். அவ்வாறு மந்திரக் கட்டுக்களால் கலையிழப்பவர்களை  கும்பத்துமாலின், தலமைப்பூசாரி  மாற்று மந்திரம், அல்லது கட்டவிழ்ப்பு மந்திரம் சொல்லி, அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார். அப்படியான கட்டுக்கள் சிலவேளை மணிக்கணக்கில் நீளும்.  மந்திரக் கட்டுக்கள் அவிழ்க்கப்படும் வேளையில் உன்மத்தமாக ஆடத் தொடங்கும் கலையாடிகள், கூட்டத்துக்குள் மறைந்திருந்து கட்டு மந்திர உச்சாடனம் சொல்பவரை சிலவேளை தாக்கவும் செய்வார்கள். இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும். அதை ஆவலோடு  பார்த்து ரசித்திருக்கும் மக்கள் கூட்டம்.

தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாவில், பத்தாம் நாள் விஜய தசமி இரவு கன்னி வாழை வெட்டுவார்கள்.  பூசையின் நிறைவில், கும்பங்கள், கரகங்களுடன், கலையாடிகளுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். அவ்வாறு ஊர்வலங்கள் செல்லும் பாதைகளில், மந்திரப் போட்டிகளும் நடக்கும். ஊர்வலம் செல்லும் பாதைகளில், வழிமறித்துச் செய்யப்படும் மந்திரக்கட்டினைத் தாண்டிச் செல்ல முடியாது கலையாடிகள் தவிப்பார்கள். அந்த இடத்தில் தலைமைப் பூசாரி, மாற்று மந்திரத்தால் தடை உடைக்கவேண்டும். இந்தத் தடை சில இடங்களில் மணிக்கணக்காகும். சிலவேளைகளில் அது முடியாமல் போகையில் தடை ஏற்படுத்தியவரே அதனைத் தளர்த்தி அவிழ்க்கவும் செய்வார். அவ்வாறு தடைகள் நீக்கப்படும் போது, பூசாரியாரும், கலையாடிகளும், அந்த மந்திர வித்தையாளரை வாழ்த்தி மதிப்பளிப்பார்கள். இதில் மிகக் கடுமையான போட்டிகள் நடந்தாலும், யாரும் ஒரு எல்லை மீறிச் செய்வதில்லை. அதனை தெய்வக் குற்றமாகவும் கருதிய நம்பிக்கையாளர்கள் அவர்கள்.

- கும்பங்களின் ஊர் உலா -
போட்டிகள் மட்டுமன்றி, மரியாதை வரவேற்புகளும் நிகழும். எல்லா வீடுகளிலும், நிறைகுடம், பாணக்கம் எனும் தேசிக்காய், சர்க்கரை சேர்த்த நீராகாரம், கோப்பி, தேநீர், போன்றன வழங்குவார்கள். தொடர்ச்சியான துன்பங்களுக்காளான வீடுகளில் சிறப்பு மடைகளிட்டு, கலையாடிகளிடம் அருள்வாக்குக் கேட்பார்கள். நேர்த்தி வைப்பார்கள். காணிக்கை செலுத்துத்துவார்கள்.

கிழக்கின் வித்தியாசமான இந்த நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இக்கோலங்கள்  அப்பகுதிகளில் அருகி, ஒரு சில இடங்களில் மட்டுமே  தற்போது நடந்து வருகின்றன. இக் கட்டுரையினை வாசித்து முடிக்கையில், இதிலென்ன பெரிய கலைநுட்பம் இருக்கிறது எனச் சிலரது மனங்களில் கேள்வி எழலாம். ஆனால் இது  முக்கியமான நாட்டார் கலை வடிவம் என்பது  திண்ணம்.

கும்பத்து மால் வழக்கம்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில், திருகோணமலையிலே பிரித்தானியப்படையின் கீழிருந்த சீக்கியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், கும்பம் ஆடுபவர்களுக்கு போர்த்துக்கேயர் காலத்தில் அரிசி பருப்பு வழங்கப்பட்டதாயும் ஒரு செவிவழி செய்தி உண்டென ஒரு கருத்தும், சேரநாட்டு அரசனால் பல கண்ணகி கோயில்கள் கிழக்கில் கட்டபட்டதாகவும் , அதன் நீட்சியாக, ஆரிய பண்பாடற்ற  நவராத்திரி விழா தான் உண்மையான திராவிட பண்பாட்டு விழாவாக இருக்கலாம் என மற்றொரு கருத்தும், இதனை நான் இணையத்தில் முன்பு எழுதியிருந்த போது,  தெரிவிக்கபட்டன. உண்மையில் இவை தொடர்பில் நானும் ஆழமாக அறிந்திருக்கவில்லை. ஆயினும் வடக்கின் கலாச்சாரக் கூறுகளுடன் பெரிதும் மாறுபட்டிருந்ததை அவதானித்திருக்கின்றேன். 

வடக்கில் நவராத்திரி கும்பம் வைப்பதென்பது, கோவிலாயினும், வீடாயினும், நவதானிய முளையிட்டு, அதன் மேலே நீர் நிறைந்த கலசமும், அதன் மேலே மாவிலை, தேங்காய் வைத்துக் கும்பம் தயாராகும். ஆனால் இங்கு வைக்கப்படும் கும்பங்களில் வேப்பிலை பிரதான அங்கம் பெறும்.
ஊர் உலாவிற்கு எடுத்துச் செல்லும் கும்பங்களின் அமைப்பும் அலங்காரமும் கூட வித்தியாசமானதாகும். நீண்ட கூம்பு வடிவத்தில் அலங்கரிக்கப்படும் கும்பத்திலும் வேப்பிலை முக்கியம் பெறும்.  இவ்விதமான அலங்காரங்கள், கேரளம், மற்றும் வடநாட்டுப் பாணிகளில் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.
 - யாழ்ப்பாணத்து வன்னி வாழை -
அதேபோல் வாழைவெட்டுச்  சடங்கிலும்  பாரிய மாறுபாட்டினைக் காணலாம்.  யாழ்ப்பாணப்பகுதிகளில்  மானம்பு உற்சவத்துக்காக நடப்படும் வாழைகள் குலைபோட்ட வாழைகளாகவும்,  மகிஷ சங்காரத்தின் போது மகிஷன் வன்னி மரமாகி நின்றான் என்பதனால், நடப்படும் வாழைகளில் வன்னி மரத்தினை இலைகளைச் சொருகி, அதனை "வன்னி வாழை"யாகவும் அழைப்பார்கள். ஆனால் கும்பத்து மால்களில் வெட்டப்படும் வாழைகள், ஏழு அல்லது ஒன்பது இலைகள் விரிந்த இளங் கன்றுகளாக அமையும்.  அதனால் அவற்றைக் "கன்னி வாழை" என அழைக்கும் மரபும் உண்டு. ஆனால் இவைகள் தாண்டி, இது ஒரு தமிழ் மரபு என நான் கருதுவதற்கு பிறிதொரு காரணமுளது.

மந்திரம், மகத்தான சக்தி கொண்ட ஒரு மனக் கருவி என்கிறார்கள் பெரியோர்கள். மந்திரம், யந்திரம் என்கிற அறிவியல் கிழக்கு மாகாணத்திற்கு சிறப்பானது.  இது தீமையான வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது அல்லது செயற்படுத்தப்பட்டுவிட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில், "மனத்தொழில்நுட்பக்கருவிகள்" என்கிற அறிவியல் முக்கியத்துவம் பெறுகிறது. விபத்துக்களில் அங்கங்களை இழப்போருக்கு, செயற்கைப் பாகங்களைப் பொருத்தி, அவற்றை செயற்படுத்தும், வழிபற்றிய ஆய்வுத்துறையில் இதுபற்றி நிறைய தேடப்படுவதாக அறிகின்றோம். ஆனால்   "மனத்தொழில் நுட்பக்கருவிகளை" மிகச் சாதாரணமாக பயன்படுத்திவந்த பாரம்பரியம் கிழக்கு மாகாணத்திற்கு இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தில் உச்சரிக்கபட்ட மந்திர உச்சாடனங்கள் தமிழ்மொழியில் இருந்ததென்பது ஆச்சரியமான உண்மை.
கும்பங்கள், ஊர்மனைகளில் சுற்றிவருகையில், அடிக்கப்பெறும் பறை, உடுக்கு, என்பவற்றின் ஒலிகளும், கலையாடிகளுக்கு ஊற்றப்படும் மஞ்சள்நீரும், வீசப்படும் சாம்பிராணிப் புகையும், அந்த ஊர்மனைகளில் நிரவியிருந்த எதிர்மறை அலைகளை விலக்கி விடுகின்றன எனக் கொள்ளலாம். கும்பம் சுற்றிச் சென்ற இடங்களின், அன்றைய காலை தெய்வீக மணத்துடன் புலரும். கும்பம் சொரியும் அன்றைய பொழுதில் மழைவருவது என்பது மாறாத ஒரு பண்பாக இருந்துள்ளதைப் பலரும் அறிவர். இயற்கையோடினைந்த இப் பண்டிகையை, ஒரு தமிழ் நாட்டார் கலைவடிவமாக நான் காண்பதன் காரணமும் இவையெனலாம்.

படங்கள் : படம்1- நம்ம வீட்டுக் கொலு.
படங்கள் 2-6 தம்பலகாமம் சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டவை.
படம் 7 நல்லூர் இணையத்தில் பெறப்பட்டது.
படம் 8 சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டது



No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...