06/11/2019

கொலுசியம் என்னும் (கொலை) அரங்கம்


இத்தாலியின் தலைநகரம் ரோம். கலைத்துவம், நாகரீகம், தீரம் நிறைந்த ரோமப் பேரரசின் தலைநகரம்.  வீழ்ச்சியுற்ற ரோம சாம்ராச்சியத்தின் எச்சங்கள் சுமந்த கலைத்துவ நகராகவே இப்போதும் காட்சி தருகிறது. பார்பதற்கும் ரசிப்பதற்கும் பலவிடங்கள் உள்ளன. இந்தப் பத்தியில் நாம் பார்ப்பது கொலுசியம் என்னும் (கொலை) அரங்கம் பற்றியது.  2006 ம் ஆண்டில், இணையத்தில் நாம் எழுதிய கட்டுரையின் மீள் பதிவு இது. ஆயினும், மேலும் சில தகவல்களுடனும், படங்களுடனும், புதிய படையலாக உங்கள் முன்.

சரித்திரங்களைப் பாடமாகப் படித்திருந்த காலத்தில், " வெள்ளையர்" எனின் மாசற்றவர் எனும் பொதுப்புத்தி மனதுள் நிறைந்திருந்தது. அறிவார்ந்து சிந்திக்கத் தொடங்கிய போது அந்த எண்ணம் மெல்ல மாறியது. புலம்பெயர் வாழ்க்கையின் அனுபவ தரிசனங்கள், எங்கள் நிலங்களுக்கு எஜமானர்களாக வந்து கோலோச்சியவர்கள் ஒன்றும் கோமகன்கள் இல்லை, கடற்கொள்ளையர்களாகவும், அடியாட்களாகவும், வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் எனும் உண்மை உறைத்தது.

ஏறக்குறைய இறப்பு நிலைக்கு வந்துவிட்ட ஒரு நோயாளி, யாரோ ஒருத்தர் வருகைக்கான கனங்களைக் கழிக்கும் நிலையிலிருந்த போதும், தன வாழ்வின் எழுச்சிமிகு நிலைகளை எண்ணிப்பார்த்து  ஏங்குவது போலிருந்ததது அந்தப் பெரும் அரங்கைப் பார்க்கையில்.
Coliseum என்பதற்கு அகாராதியில் பேரரங்கம் எனப் பொருள் வந்தது.  லத்தீன் மொழியில் கோலோசியத்தின் பெயர் ஆம்பிபிடியம் ஃப்ளாவியம் (Amphitheatrum Flavium), ஆங்கில மொழி உலகில் வலுப்பெற, அது ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் (Flavian Amphitheatre) என ஆங்கிலமயமானது. அகண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆடம்பர களியரங்கு, ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளுக்கு அது கிலியரங்கு. உண்மையில் அது ஒரு கொலை அரங்கு.
வாகனத்தைவிட்டு இறங்கியதுமே, வான்முட்ட உயர்ந்து நிற்கும் அந்த கலையரங்கின் பிரமாண்டம் உசுப்பியது. உள்ளே நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த போது, இந்த பிரமாண்டத்தை எந்தக் கோணத்தில்  முழுமையாக  பதிவு செய்யலாம் என எண்ணத் தோன்றியது. அழிந்து போன நிலையில் இருந்த போதும், ஒவ்வொரு புறமும் ஏதோ ஒருவித அழகைக் கொட்டிவைத்த வண்ணமேயிருக்கிறது.
 
அம்ஃபிதியேட்டர் (amphitheatre)  எனும் கட்டிட வகையிலான இந்த  அரங்கின் வட்டவடிவிலான அமைப்பினை ஒட்டியே, லத்தீன மொழியில் இதற்கு கொலோசியம் என்ற பெயர் வந்ததாகச் சொல;கிறார்கள். ரோம் நகர் தீப்பிடித்து எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் குறித்து அறிந்திருப்போம். அவனது உருவச்சிலை ஒன்றின் பெயரில் இருந்து கோலோஸ்ஸியம் என இது அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  நீரோ மன்னனின் ஆட்சியைத் தொடர்ந்து வந்த, ஃப்ளாவியன் வம்சப் பேரரசர்களால் கட்டப்பட்டது இக் கலை அரங்கு.  ஒரே தடவையில் 65 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடியதான பரப்பு விஸ்தீரனமானது.
சும்மா சுற்றிப்பார்த்து வருகையிலேயே அரைநாட்பொழுதினை அப்படியே பறித்தெடுத்து விடுகிறது அந்தப் பிரமாண்டம். சந்தேகமில்லை, கலையின் நயம் தெரிந்தவர்களும், நயக்கத்தெரிந்தவர்களும் இணைந்த இணைவில் பிறந்திருக்கிறது அந்தக் கலையரங்கு. கலைகளின் வரைபுயர்வில், நாகரீக உச்சம் தொட்ட இனத்தவர்களாக வாழ்ந்தவர்கள் பட்டியலில் அடங்குபவர்கள் ரோமானியர்கள். இருந்தென்ன, மனித மான்பு மறந்து, சகமனிதனின் வலியை, சாவை, குரலெழுப்பி ரசித்து, கொண்டாடியிருப்பதை அறியும்போது, 'அடப்பாவிகளா' என அரற்றிவிடுகிறோம்.


ரோமப் பேரரசன் வெஸ்பாசியன் (Vespasian) ஆட்சிக்காலமான கி.பி 72 ஆம் ஆண்டில், கட்டத் தொடங்கிய இந்த அரங்கம்,  அவனது அவன் மகன் டைட்டஸ்  ஆட்சியில், கி.பி 80 ஆம் ஆண்டு  நிறைவு பெற்றது.  சுமார் நூற்றைம்பது அடி உயரம் கொண்ட இந்த வட்ட அரங்கத்தில், நான்கு கலரிகள் உள்ளன.[ முதலாவது கலரி அரச குடும்பத்தினருக்கும், இரண்டாம் கலரி  நிலப்பிரபுக்கள் மற்றும் பிரதானிகளுக்கானது. மூன்றாம் கலரி தொழிலாளர்களுக்கும், நான்காம் கலரி பெண்களுக்குமாகக் கட்டப்பட்டவை. அடித்தளத்தில், அடிமைகள் சிறைக் கூடமும்,  கொடிய விலங்குகளின் கூண்டுகளும், ஆயதக் களஞ்சியங்களும் இருந்திருக்கின்றன.

மிருகங்கள் வளர்க்கப்பட்ட கூடுகள், மிருகங்களாய் அடைக்கப்பட்ட மனிதர்களின் குறுங்கூடங்கள், அடித்தளத்தில். அதன் மேலாக ஆடுதளம், அல்லது கொலைக்களம். அதற்காப்பால் விரிந்துயரும், விருந்தினர், பார்வையாளர், அமர்தளங்கள். அனைத்தையும் அழகியகலை நயத்துடனும், அதிநுட்பத் தொழிற்திறனுடனும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக , எண்ணிட முடியா இடாம்பீகத்துடனும், கட்டிமுடித்து, கலை ரசிக்காது கொலை ரசித்திருக்கிறார்கள்.


எதிரிகள், கைதிகள், குற்றவாளிகள் என வகைபிரித்து  அடைத்து வைத்திருந்த மனிதர்களை, கிளாடியேட்டர்கள் என அழைத்து, கத்திகள், கோடாரி, கேடையம், வீச்சரிவாள்,  இரும்புக் குண்டு ஆகியவற்றைக் கொடுத்து மனிதனை மனிதன் தாக்கிக் கொல்வது, மனிதனை மிருகத்துடன் சண்டையிட வைத்துக் கொல்வது, என வகைவகையாய் வதைகள் செய்வதை, ஊர்கூடி ஒய்யாரமாக ரசித்திருக்கிறார்கள்.


' ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் ' எனத் தமிழில் ஒரு முதுமொழியுண்டு. இடிந்து போய்கிடக்கும் ரோமானியச் சிதிலங்களைப் பார்க்கும்போது, கலையரங்கில் கதறியழுத ஒவ்வொருத்தன் கண்ணீரும், தங்கள் இராச்சியங்களின் காரைகளை பெயர்த்தெடுக்குமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் சக்கரவர்த்திகள்.

பாதாளச்சிறைகளின் நிலங்களில் இப்போ பசும்புல் முளைத்திருந்தாலும், பார்வையாளர் பலர் தினமும் பார்த்து ரசித்துப் போனாலும், உள்ளிருந்து வெளிவருகையில், எங்கோ ஓர் மூலையில் யாரோ அழும் ஓலம் சன்னமாய், அவலமாய், கேட்பது பிரமை. இலேசாக நடுங்குகிறது சரீரம். ஜெபமும் சபிப்பும் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடுகிறது.

 
எதுவானாலும், எங்கள் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள் என, எதிர்காலத் தலைமுறைக்கு ஒழிவு மறைவின்றி, ஒப்புக்கொடுக்கின்ற வகையில் மனிதர்களாக நிமிர்கின்றார்கள்.

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...